மேகனின் முகத்தில் அந்த அதிர்ச்சியை நான் எதிர்பார்த்திருந்தேன். மேலும் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கும்விதமாக.
‘நல்லவேளை டீமர் ரீசைக்ளிங் பராமரிப்பு வேலைக்காக சில நாட்கள் நிறுத்தி வைத்திருந்தார்கள். ஓடெல் இறக்குமுன்னர் உங்கள் வீட்டிலிருந்து கொண்டு சென்ற புத்தகங்களில் சிலது எனக்குக் கிடைத்தது. இது உங்கள் நம்பிக்கை கூட்டத்தின் log புத்தகம்தானே?’
அட்டையை மட்டும் அவர் பார்வையில் படும்படி காட்டினேன். மேகன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
‘இதில் சில பக்கங்களும் கிழிக்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். ஓடெல் இறந்த அறையில் சில காகிதங்கள் எரிக்கப் பட்டிருந்தன. Go Green என்று ரேடியோவிலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் கூவுபவர் பேப்பரை எரித்திருக்கிறார் என்றால் ஏதோ மறைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.'
மேகனின் தாடைகள் மெல்ல அசைந்தன. நன்றாக இளகிவிட்டார் என்றுத் தெரிந்தது. இன்னமும் அழுத்தம் கொடுக்க நிறைய கதைகள் யோசித்து வைத்திருந்தேன். ஆனாலும் அவரைத் துன்புறுத்துகிறார்ப் போல மனதில் ஒரு வருத்தம் இருந்தது.
‘இவ்வளவு வருடங்களாக பார்க்காதவர் இப்பொழுது மட்டும் பார்த்துவிட்டாராமா? ஐயோ... ஓடெல்’ அவர் முகம் சோகத்தில் கொஞ்சம் கோணலாகிவிட்டது போல் இருந்தது.
’ஹோப் கூட்டங்களின் லாக் புத்தகங்கள் அந்தரங்கமானவை. அவற்றை நாங்கள் உடனடியாக ரீசைக்ளிங் அனுப்பிவிடுகிறோம். நீங்கள் அந்த புத்தகங்களை எதற்கும் பயன்படுத்தக் கூடாது’ என்று கொஞ்சம் தழுதழுப்போடும், உறுதியோடும் சொன்னார்.
‘நீங்கள் ஒத்துழைத்தால் இந்த புத்தகத்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த மாட்டோம்’
‘என்ன விவரம் வேண்டும் உங்களுக்கு?’
‘வியட்நாமில் நடந்தது பற்றி பிராஸ் என்றேனும் சொன்னாரா?’
‘பாவம்... அவர் மனதில் முள்ளாக தைத்திருந்த அந்த விவகாரம்... பல நாட்கள் அவர் தனிமையில் அழுதிருக்கிறார். அன்று ‘நம்பிக்கை’ கூட்டத்தில் அவருடைய அனுபவத்தை தெரிந்து கொண்டபோது நான் மிகவும் துன்பப்பட்டேன்.’
‘என்ன சொன்னார்? என்ன நடந்தது வியட்நாமில்?’ மென்மையான முறையில் எடுத்துக் கொடுத்தேன்.
மேகனின் கண்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே போய்விட்டன சட்டென்று.
‘ஓடெல் அருமையானதொரு நண்பன். வியட்நாம் போருக்கு அவர் போனபோதுதான் நான் மிகவும் தனியாக உணர்ந்தேன். அவருக்கு நான் எழுதிய கடிதங்கள் எங்கள் நெருக்கத்தை கூட்டச் செய்தன. ஆனால் அதே சமயம் பிராஸ்ஸும் தனது மனது என்பாற் கனியத் துவங்கியிருந்ததை உணர ஆரம்பித்திருந்தார். ஓடெல் காட்டும் கடிதங்கள் அவருக்குள் வேறுவகை உணர்வுகளை எழுப்பியிருந்தன. தனக்கு வாய்ப்பில்லாமல் ஓடெல் என்னை நெருங்குவதாக அவர் கற்பனை செய்து கொண்டார்.’
மேகனின் கண்களில் துயரமும் இயலாமையும் கலந்து தெரிந்தது.
‘ஆம். அவருக்கு என் மேலிருந்த காதல்தான் அப்படி நினைக்கத் தூண்டியதாக இருக்க வேண்டும். அது துரோகம் என்றும் துரோகத்திற்கு தண்டனையாகத்தான் ஓடெல்லை அவர் சுட்டார் என்றும் அவர் மனது தீர்மானமாக நினைத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஓடெல் உயிர்பிழைத்து எஞ்சிய நாட்கள் முழுவதும் தனிமையில் வாழப்போகிறார் என்று அவர் எண்ணிப் பார்க்கவில்லை’
சிறிது தண்ணீர் குடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.
’குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபடவே அவர் ‘நம்பிக்கை’ கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் அன்றிலிருந்து நான் அந்தக் குற்ற உணர்ச்சியில் சிக்கிக் கொண்டேன். பொதுவாக 6 மாதங்கள், ஒரு வருடத்திற்கு மேலாக ஹோப் நிகழ்ச்சியின் ‘லாக்’ புத்தகங்கள் நாங்கள் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் பிராஸ் தனது அனுபவததை எழுதிய புத்தகம் மட்டும் என்னால் அழிக்க முடியவில்லை.
என்றாவது ஒரு நாள் ஓடெல் தனக்கு நேர்ந்த அநியாயத்தை தெரிந்து கொள்ளட்டும் என்று மேகன் நினைத்தாரோ? நிமிர்ந்து என்னைப் பார்த்த மேகன்,
‘பிராஸ் மேல் குற்றப் பத்திரிகை சாட்டப் போகிறீர்களா? தயவுசெய்து நம்பிக்கை கூட்டக் குறிப்புகளை சாட்சியமாக சேர்க்காதீர்கள். அந்தக் கூட்டம் பலரின் புனிதமான அந்தரங்கத்தைப் பற்றியது.’ என்றார்.
நான் மெதுவாக தொண்டையைக் கனைத்துக் கொண்டேன்
‘நாங்கள் விருப்பப்பட்டாலும் கூட இந்தப் புத்தகங்களை சாட்சியமாக சேர்க்க முடியாது. பெயரில்லாமல் எழுதி வைக்கப்பட்ட அனுபவங்களை ஹேஷ்யங்களாகத்தான் ஏற்க முடியும். மேலும்...’
எனது கையிலிருந்த புத்தகத்தைக் காட்டி,
’டீமரில் ஓடெல் சேர்த்த புத்தகங்கள் அழிக்கப் பட்டுவிட்டன. எங்களுக்கு ஒன்றுமே மிஞ்சவில்லை. இது உங்கள் வீட்டில் கிடைத்த பயன்படுத்தப்படாத புத்தகம்தான். இதில் ஒன்றும் எழுதப் படவில்லை. பிராஸ்ஸிற்கும், ஓடெல்லுக்கும் இருந்த நட்பு-பகை உறவை எந்தக் கோணத்தில் அணுகுவது என்பதில் மிகவும் குழப்பம் இருந்தது. திடீர் என்று வெடித்த உணர்ச்சி போராட்டத்தினால் நேர்ந்த சம்பவம் இது என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. இறப்பதற்கு முன்னர் ஓடெல் உங்கள் வீட்டில் எடுத்துச் சென்ற புத்தகங்களில் எங்கேனும் இந்த போராட்டத்தின் பொறி இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.’
இம்மாதிரி சில சமயம் தடாலடி அடித்தால்தான் கேஸை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த முடியும். அந்தப் புத்தகத்தை டேபிளில் மேகனின் அருகே நகர்த்தினேன்.
‘வியட்நாமில் நடந்த் சம்பவத்திற்கு ஒரே சாட்சி... பிராஸ்தான். அவராக விருப்பப்பட்டு சொன்னால்தான்... மேலும் இப்பொழுது ஓடெல் இறந்த பிறகு அந்த சம்பவத்திற்கு முக்கியத்துவமே இல்லாமல் போய்விட்டது’
மேகன் கண்களை மூடிக் கொண்டார். அவர் கண்களிலிருந்து சில நீர்த்துளிகள் உருண்டோடி வழிந்தது. எத்தனை வருடமாக சுமந்திருந்த மனபாரத்தை இன்றுதான் இறக்கி வைத்திருக்கிறார்.
’பிராஸ்ஸிற்கு நினைவு திரும்பியவுடன் அவரைக் கைது செய்வீர்களா?’ என்று மெதுவாகக் கேட்டார்.
‘இல்லை. போன வாரம் ஓடெல்லை சுட்டது நிச்சயம் பிராஸ் இல்லை. யார் என்று கண்டுபிடித்துவிட்டோம்’ என்றேன்.
0 மறுமொழிகள்:
Post a Comment