அவர்கள் எப்பொழுது நுழைந்தார்கள், எப்படி நுழைந்தார்கள் என்று நாம் நினைத்துப் பார்க்கும் முன்னர் அவர்கள் இருவரும் அந்த அறையினுள் நுழைந்து முழுக் கட்டுபாட்டையும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அறையின் நடுவே பெரிய் மேஜை இருக்க, இந்தப்புறம் வலதுபக்கமாக நின்று கொண்டிருக்கிறவன் மேற்சொன்ன வசனத்தை சொல்லி முடிக்கும் முன்னரே மேஜைக்கு அந்தப் பக்கம் இடது பக்கம் நின்றிருந்த, சின்னு என்று அழைக்கப்பட்டவன், துப்பாக்கியை தூக்கி நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் சந்தன பொட்டுக்காரரின் நெற்றிப் பொட்டில் வைக்கின்றான்.
‘க்ளக்’ என்று சத்தத்தோடு காக்-அப் செய்யும் சத்தம் கேட்கிறதா? வலது முழங்கையை நேராக்கி கீழுதட்டை கடித்துக் கொண்டு இறுகிய தாடையுடன் துப்பாக்கியின் குதிரையில் ஆட்காட்டி விரலை அழுந்த பதித்துக் கொள்கிறான் சின்னு.
‘ஒண்ணு... ரெண்டு...’ என எண்ண ஆரம்பித்தவனை இடைமறிக்கும் விதமாக
‘ஹே.. ஹே... என்னது இது? வாட் இஸ் கோயிங் ஆன்?’ என்று பதறும் சந்தன பொட்டுக்காரர் கைகளால் மேஜை விளிம்பைப் பற்றியபடி, மேஜைக்கு அடியில் ஏதோ தேட முயல,
‘கை அங்கியே இருக்கட்டும் மாமூ. உன்னோட அலார்ம், செக்யூரிட்டி சிஸ்டம் ஒண்ணும் ஒர்க் ஆவாது. எல்லாத்தையும் இண்டெர்செப்ட் பண்ணியாச்சு. இந்த கச்சடா மாடல்லாம் எங்க புடிச்ச நீயு? உன்னப் பத்தி ரொம்பவே பயமுறுத்தி வச்சிருந்தாங்க ஆனா இவ்ளோ சுலபமா மாட்டுவன்னு எதிர்பார்க்கவே இல்ல நானு. ஒரு ஃபோன் போட்டு மெரட்டினா நீயே சூஸைட் பண்ணிட்டிருப்ப போல’
‘கமான்! சட்டு புட்டுன்னு சுட்டுபுட்டுப் போயிடலாம். ஏழு, எம்பதெட்டுன்னு வளத்திட்டிருக்காத’ சின்னுவின் குரலில் ஒரு பரபரப்பு தெரிகிறது.
ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் சின்னுவின் உடல் விறைப்பாகிக் கொண்டேயிருக்கிறதை கவனித்தீர்களா?. துப்பாக்கி சுடுவது என்பது வெறும் குறி பார்த்து சுடுவது மட்டும்தான். ஆனால் கொலை செய்வது? அதுவும் உயிரோடு இருக்கும் ஒரு ஆளின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து இத்தன நெருக்கமாக சுடுவதற்கு ஒரு வித போதையான மனநிலை வேண்டும். சின்னு அதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறான். சிறிது சிறிதாக... வேக வேகமாக... நீங்கள் இப்பொழுது ‘ஏ’ என்று ஆரம்பித்து ‘ழு’ என்று முடிப்பதற்குள் மாமூவின் மூளையை சிதறடித்து விடுவான்.
’தலைவரோட செய்தியை தவறாமல் சொல்லிடனும்ல. நம்ம மாமூடா இவரு. ஏன் செத்தோம், எதுக்கு செத்தோம்னு தெரியனும்ல’ மாமூவை மீண்டும் பார்த்துக் கொண்டே அழுத்தமாக ‘யாரால செத்தோம்னும் தெரியனும்ல’ என்கிறான் வலது பக்கம் இருக்கிறவன்.
அவனைப் பார்த்தால் ஒரு தேர்ந்த அதிகாரி போல ஆளுமையானத் தோற்றம் தெரிகிறது. மிகவும் அமைதியாக, அதே சமயம் கவனத்திலிருந்து பிசகாத நாசூக்கோடு சிரிக்கிறான் பாருங்கள். மாமூ மேஜைக்கு அந்தப்புறம் நம்மைப் பார்த்தவாறு சேரில் உட்கார்ந்திருக்கிறார். அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிகிற அதிர்ச்சி, இவர்கள் இருவரின் பிரவேசத்தையும் அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்று சொல்கிறது. அவருக்கு பதற்றமாக இருந்தாலும் எதிரில் இருக்கும் இருவரும் அதிதீவிரமாக, கொலை செய்ய அஞ்சாது இருப்பவர்களாக, கொஞ்சம் அசைந்தாலும் ‘பொட்’டென போட்டுவிடுபவர்களாக இருக்கிறார்கள் என்று உணர்ந்திருக்கிறார். அவர் முன்னால் மேஜையில் விரித்து வைத்த செஸ் போர்டும் சில காய்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மாமூவிற்கு இப்பொழுது நன்றாக வியர்க்க ஆரம்பிக்கின்றது. நெற்றிப் பொட்டில் திண்ணமாக படிந்திருக்கும் குழாயின் ம்றுபகுதியில் விடுபடக் காத்திருக்கும் தோட்டாவை அவர் உணர ஆரம்பித்துவிட்டார். குண்டு துளைக்கும் போது சூடாக இருக்குமோ? மரணத்தை இவ்வளவு நேரடியாய், துப்பாக்கி முனையின் ஜில்லிப்பில் உணரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
அவன் நிதானமாக மாமூவின் முன் இருக்கும் செஸ் போர்டைப் பார்த்தவாறே நிற்கிறான். அவன் மனதில் பின்னல் பின்னலாக காய்கள் சேர்ந்து, விலகி, ஓடி ஒளிந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது.
‘இது என்ன நஜ்டோர்ஃப் வேரியேஷனா? கேம் முடிஞ்சிடுச்சே மாமூ.’ காய்களை நகர்த்துகிறான். ‘செக் அண்ட் மேட்’
‘ஆனைக்குதான் அடி சறுக்கும். மாமூவுக்குமா மதி கெட்டுப் போகும்? ஏன் இப்படி ஒரு நம்பிக்கை துரோகம்? தலைவர் ரொம்பவும் வருத்தப்பட்டார் மாமூ.’ அவர் கண்களைப் சற்றுப் பார்த்துவிட்டு ‘அதிகம் வலியில்லாம ஒரே புல்லட்ல முடிச்சிடுன்னு சொன்னார்’
கடவுளை நோக்கி பிரார்த்திப்பது போல் கைகளை உயர்த்திக் கொண்டு ‘நமது அன்பிற்குரிய மாமூவின் மகத்தான சரித்திரம் இன்றோடு முடியப்போகிறது. அவர் ஆன்மா சாந்தியடைவதாக’ என்று நாடகபாணியில் வணங்குகிறான். பிறகு சின்னுவின் பக்கம் திரும்பி...
‘மூனு. நாலு...’ என்று எண்ணிக்கையை தொடர....
‘வெய்ட்... வெய்ட்... யாரு நீங்கள்லாம்? எதுக்கு இந்த விளாட்டு? பணம் எதுவும் வேணுமா? எப்படி உள்ள வந்தீங்க...யூ டோண்ட் நோ எபவுட் மீ...’
‘ஏன் தெரியாது? உன்ன நல்லாவே தெரியும் மாமூ. இன்ஃபாக்ட் உன்னப் பாத்து நான் ரொம்பவும் ஆச்சர்யப் பட்டிருக்கேன். வழிபட்டிருக்கேன். சந்தோஷப்பட்டிருக்கேன். உன்ன மாதிரி ஆகனும்னு கனவு கூடக் கண்டிருக்கேன் மாமூ. நான் மட்டுமா? என்ன மாதிரி எத்தனயோ பேருக்கு நீ ஒரு ஆதர்ச நாயகன்தான். இந்தத் தொழிலோட நெளிவு, சுளுவு, சூழ்ச்சி, சூதானம்னு உன்னப் பாத்து நிறைய கத்துகிட்டிருக்கேன். இன்னமும் கத்துகிட்டேயிருக்கோம்.’
சின்னு கொஞ்சமாக பொறுமையிழந்து ‘ரோ! போதும் சொற்பொழிவு. இட்ஸ் கெட்டிங் லேட்’ என்கிறான்.
மாமூ சட்டென ரோவை பார்த்து திரும்புகிறார் ‘ஓ! நீதானா அந்த ரோ? நெறய கேள்விபட்டிருக்கேன். தலைவர் நெறய நெறயச் சொல்லிருக்காரே. அப்படியே நான் சின்னப்புல இருந்த அதே வேகம்... சாகசம்... வீரம்... எல்லாம். நீதான் என் வாரிசா இருக்க முடியும்னு நினச்சேன். இவ்வளவு தைரியமா இங்க வந்து சாமர்த்தியமா நிக்கற பாரு’ குரலில் வியப்பு அடர்ந்திருக்கிறது.
‘ஆனா, நம்ம முதல் சந்திப்பு இப்படி அமையும்னு எதிர்பாக்கல’ ஏமாற்றத்தோடு முடிக்கிறார்.
மாமூ தலயை மெல்ல நகர்த்த முயலும்போதெல்லாம் சின்னுவின் துப்பாக்கி இன்னமும் அழுத்தமாக நெற்றியில் பதிகிறது.
‘தலைவர்கிட்ட நானே ஃபோன்ல பேசறேன் ரோ. சுலபமா தீர்த்திடலாம் பிரச்சினையை. நாம சேந்து சாதிக்க வேண்டியது நிறய இருக்கு கண்ணு. நீ என் வாரிசு. ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். தலைவர் என் அப்பா மாதிரி. அவர் ஒரு நாளும் என்னை அழிக்க நினைக்க மாட்டாரு. என்னயப் போய்... என்னயப் போய்... ’ குரல் குழறுகிறது.
‘நான் நம்பிக்கையான விசுவாசி... விசுவாசமான நாயி... என் சொத்தெல்லாம் அவருதுதான். எவ்வளவு இருக்குன்ன் எனக்கே சரியா கணக்கு தெரியாது. எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோ. ஒரே ஒரு தடவ தலைவர்கிட்டப் பேச விடு. நான் எல்லாத்தையும் நேராக்கிடறேன். எல்லாம் தெளிவாயிடும் கண்ணு.’
‘எல்லாத்தையும்னா? செஞ்ச துரோகத்தை அழி ரப்பர் வச்சு அழிக்கப் போறியா மாமூ? கணக்கேயில்லாத சொத்து எப்படி சேந்திச்சு? தலைவருக்கு தெரியாத எப்படி வந்திச்சு மாமூ? இந்த தொழிலுக்கே நம்பிக்கைதானே விதை. ஆனா நீ விதைக்கே வெந்நீர் ஊத்திட்டியே. துரோகத்தை துவக்கதிலேயே கெல்லிரனும். இல்லன்னா உன்னமாதிரி பூதாகரமா வளந்து நிக்கும்.’ என்று சொல்லிவிட்டு வேண்டாத நினைவுகளை உதறிவிடுகிற மாதிரி தலையை சிலுப்பிக் கொள்கிறான்.
’அஞ்சு... ஆறு..’ என்று தொடர்ந்து எண்ணத் தொடங்க...
மாமூ கண்களை இறுக மூடிக்கொள்கிறார். சின்னு இடது கையை துப்பாக்கியின் மேல் அணைவாக வைத்துக் கொள்கிறான். இன்னும் ஒரே ஒரு நொடிதான்.. ரெடி... ஸ்டெடி...
ரோ ‘ககக’வெற்னு சிரிக்கிறார்ன். ‘உன்ன பாத்தா நெஜம்மா எனக்கு சிரிப்பு வருது மாமூ. உன்னோட பராக்கிரம கதையெல்லாம் வெறும் டுபாக்கூருதானா? நீ ஒரு வெத்துவேட்டுதான கடைசில..’
‘தங்கம்... இருபத்தாறு கிலோ தங்கம்’ மாமூவின் வாய் மெல்ல முணுமுணுப்பாகச் சொல்கிறது. கண்களை இன்னமும் திறக்கவில்லை.
ரோ காதை அவரிடம் திருப்பி கூர்ந்து கவனிப்பது போல, ‘என்னது? தங்கமா? இருபத்தாறு...’ சட்டென அவரை நேராகப் பார்த்து ‘என்ன... லஞ்சம் கொடுக்கறியா? உன் மேல இருக்கற கொஞ்ச நஞ்ச மரியாதையும் கெடுத்துக்கறப் பாத்தியா? உன் தலை வெடிச்சு... வெளில தொங்கப் போற மூளைக்கு ஒரு சல்யூட் வச்சிட்டுப் போலாம்னு நினச்சேன். சின்னு...’ என்று அவன் திரும்பும் போது மீண்டும் மாமூவோட குரல்
‘சுட்டுடு. உடனே சுட்டுடு. அதுக்காக நான் இந்த தங்கத்தைப் பத்தி பேசல. உன்ன என் வாரிசா நினக்கிறேன்னு வாய்தவறிச் சொன்னேனே... அதுக்காகத்தான் சொல்றேன். எத்தனயோ பாங்க் அக்கவுண்ட், நகை, பணம், சொத்துன்னு இருக்கு. எனக்கே என்ன கணக்குன்னுத் தெரியாது. யாருக்கு முழுசாத் தெரியும்னும் தெரியாது. நீ சுட்டுட்டுப் போனப் பிறகு யார் யாருலாமோ எடுத்து ஆளப் போறாங்க. ஆனா எனக்கு மட்டுமே தெரிஞ்ச ஒரு விஷயம் இதோ இந்த பாங்க் லாக்கர்’ பக்கத்தில் இருக்கும் கணிணித் திரையைக் காண்பிக்கிறார்.
‘லாக்கர்ல இருக்கறது இருபத்தாறு கிலோ தங்கம். கோல்ட் புல்லியன்ஸ். ஹாட் கேஷ் மாதிரிப்பா. என்னயக் கொன்னுட்டீங்கன்னா அந்த தங்கம் யாருக்கு போகும்? அநாமத்தா பாங்க்லேயே இருக்கும். என்னிக்காவது அவங்க லாக்கரை உடச்சு தங்கத்தை ஏலம் விட்றுவாங்க. என் வாரிசு நீன்னு நினச்சு சொல்றேன். அந்த தங்கத்தை நீயே எடுத்துக்கோ. செத்துப் போகும்போது ஏதாவது கொடுத்திட்டு செத்துப் போறேனே’
மெள்ள அழுவது போல முகம் கோணுகிறார்.
‘தலைவருக்கு நான் விசுவாசமா இருந்ததுக்கு எனக்கு உன் புல்லட்தான் பரிசு. உன்னோட விசுவாசத்துககாவது போனஸா இந்த தங்கம் இருக்கட்டுமே. இருபத்தாறு கிலோவையும் எடுத்துக்கோ’
‘விசுவாசத்திற்கு யாரு போனஸ் கொடுக்கிறாங்கன்னு பாத்தியா சின்னு? நீ எங்கே எந்த நாடகமும் நடத்தாம பொக்குன்னு போயிடுவியோன்னு நெனச்சேன் மாமூ. புதுசா என்னமோ கதை விடறே. உன்னோட விசுவாச நன்றில்லாம் தலைவர்கிட்ட அப்பால சொல்லிக்கறேன். அமைதியா செத்துப் போ இப்போ’
மாமூ ஏதாவது தடாலடி செய்து தப்பிக்கப் பார்ப்பார் என்று எதிர்பார்த்தால் குணசித்திர நடிகன் போல செண்டிமெண்ட் பண்ணுகிறார். இதெற்கெல்லாம் மயங்கி உயிரோடு விட்டுவிடப்போகிறோமா என்ன என்று நினைத்து ரோவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. இவரை ஏதோ சாணக்கியன் என்றெல்லாம் நினைத்தால்..
சின்னு கையை மெதுவாக் தளர்த்திக்கொண்டு ‘ரோ... இந்த எளவுக்குத்தான் வந்தவுடன் சுட்டுட்டு போயிட்டே இருக்கனும்னு சொல்றேன். வளவளன்னு பேசிட்டே இருக்கீங்கப்பா. சுட்டுடவா?’
‘ஒரே ஒரு ஃபார்ம்ல நீதான் என் வாரிசுன்னு சொல்லி கம்ப்யூட்டர்ல அனுப்பிட்டாப் போதும். நாளைக்கு அந்த லாக்கர் உன்னுது. இதோ இந்த கம்ப்யூட்டர்ல அக்கௌண்ட் லாகின் பண்ணி ரெடியா இருக்கு. நீயே அனுப்பிடு. அப்புறமா சுட்டுடு. நோ டர்ட்டி ட்ரிக்ஸ்’ மாமூ கைகளை மேலே தூக்கிக் கொள்கிறார்.
‘சுடத்தானப் போறோம். தோ ஒரே செகண்ட்டுல! அலெர்ட்டா இரு சின்னு எந்நேரமும். மாமூ பெரிய மலைமுழுங்கி’ என்று சொல்லிவிட்டு, மாமூவிடம் திரும்பி,
‘பேங்க் லாக்கர்னு... வாரிசு பத்திரம்னு நீ வலை விரிச்சா நான் வந்து மாட்டிக்குவேன்னு நினச்சியா மாமூ? ஸ்கூலுக்குப் போற பாப்பா கூட பெட்டரா யோசிக்குமே...? என்னமாதிரி பிளான் இது? கம்ப்யூட்டர்ல எதும் அலார்ம் செட் பண்ணிருக்கியா... டபடபன்னு யாராவது மறஞ்சிருந்து சுடப் போறாங்களா?’ என்று சிரிக்கிறான்.
’பொய்யில்ல. இந்த மேல் டிராலதான் லாக்கர் கீ இருக்கு. நீயே எடுத்துப் பார்த்துக்கோ. ஒரே ஒரு கிளிக்குல நீ என் வாரிசுன்னு பாங்குக்கு சொல்லிட்டாப் போதும். உன்ன யாரும் எந்தக் கேள்வியும் கேக்க முடியாது. அத்தன தங்கமும் உனக்குதான். நீயே எடுத்துப் பாரேன் சாவியை’
ரோ இடத்திலிருந்து மெல்ல நகர்ந்து மேஜைக்கு அந்தப் புறம் செல்ல யத்தனிக்கிறான்.
சின்னு ஏமாற்றத்துடன் தலையை சாய்த்துக் கொண்டு ‘ஐ காண்ட் பிலிவ் திஸ். வந்த வேலைய விட்டுட்டு தேவையில்லாத பிரச்சினைல மாட்டிக்கப் போறோம்’
‘டோண்ட் ரிலாக்ஸ் சின்னு. அலெர்ட்டா இரு. மாமூவை எப்பவுமே முழுசா நம்ப முடியாது. என்ன பாங்க மாமூ?’ என்று அவர் காட்டிய கம்ப்யூட்டர் திரையை திருப்பி ரோ பார்க்கிறான்.
சின்னு கைகள் தூக்கி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறான். ‘இன்னிக்கு கொலை பண்ணிட்டு நாளைக்குப் போய் பாங்கில நிக்கப் போறியா? இந்த தங்கம் மேட்டர்லாம் தலைவருக்கு தெரிஞ்சா நமக்கும் சங்குதான் ரோ. இது அபாயமான தொழில்தான். பட் ஐ ப்ரிஃபர் சேஃப்டி ஃபர்ஸ்ட்’ என்கிறான்.
ரோ அவனைப் பார்த்து சிரிக்கிறான். ‘நம்ம தொழிலுக்கு பாதுகாப்பே பணம்தான் சின்னு. இந்த மாதிரி கிடைக்கிற புதையல்தான் நம்ம வாழ்க்கைக்கு இன்ஷூரன்ஸ் மாதிரி. வலிய வர்ற சீதேவிய உதறக் கூடாது. தலைவருக்கு தெரிஞ்சா சந்தோஷம்தான் படுவார்.’ அவன் ‘தெரிஞ்சால்’ என்று சொன்னதில் ஒரு அழுத்தம் இருப்பது தெரிகிறதா உங்களுக்கு?
மெள்ள மெள்ள கீபோர்டுகளில் அவன் உள்ளிட ஆரம்பிக்கிறான் ‘இந்த பாங்க்தானா... நல்ல சாய்ஸ்தான்...’ என்று மாமூவை திரும்பிப் பார்த்துவிட்டு ‘ரிடயர்மெண்டுக்கு வச்சிருந்தியா என்ன?’ என்கிறான்.
’ரோ... இது நிச்சயம் புத்திசாலித்தனமான வேலை இல்லைன்னு என் மனசு சொல்லுது’ சின்னுவின் இறுக்கம் இப்பொழுது ஐம்பது சதவீதம் தளர்ந்துவிட்டிருக்கிறது. மாமூ கைகளை நாற்காலியின் பிடியில் வைத்துக் கொண்டு ரோவையேப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
திரையிலேயே கவனமாக இருக்கும் ரோ ‘இது எல்லாமே தலைவரோடதுதான் சின்னு. மாமூகிட்டேந்து நாம் மீட்கிறோம். இல்லன்னா அநாமத்தாப் போற பணம்தானே. இது என்ன புடிச்ச பொண்ணு பேரெல்லாம் கேக்கறான்?’
‘ஆமாம். அஞ்சு செக்யூரிட்டி கேள்விகள் கேப்பாங்க. நாளைக்கு நீ போய் லாக்கர தொறக்கும் போது இதே கேள்விகளுக்கு நேர்ல பதில் சொல்லனும். உன் அடையாளத்தை உறுதிபடுத்திக்கத்தான்.’
சின்னு கிண்டலாக ‘அப்படியே உன் பாஸ்போர்ட்டையும் சேர்த்து கொடுத்திரு ரோ. அவங்களுக்கு ரொம்ப சுலபமா இருக்கும்’
ரோ பெரிதாக சிரிக்கிறான்.
‘சின்னு... இந்த தொழில்ல நமக்கு எந்த அடையாளமும் நிரந்தரமில்லை. எந்த பாதுகாப்பும் இல்லை. நேத்துவரை ராஜாவா இருந்த மாமூ இன்னிக்கு டப்பாவாயிடலையா? ஆனா பணம் என்னிக்கும் மாறாது.’ என்கிறான்.
‘என் கைப்பட ஒரு ஆத்தரைசேஷன் லெட்டரும் தந்திடறேன். நாளைக்கு செத்துப் போனவன்கிட்டேந்து கையெழுத்து வாங்கிட்டு வான்னு சொன்னா கஷ்டமாச்சே’ என்றபடியே மாமூ மேஜையிலிருந்து ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து எழுதத் தயாராகிறார். இப்பொழுது அறையின் சூழல் முற்றும் இளகிவிட்டது.
’ரோ... நிஜமாவே தங்கம் இருக்கும்னு நினக்கிறியா என்ன? எவ்ளோ அது... இருபது கிலோவா?’ என்கிறான் சின்னு.
‘இருபத்தாறு கிலோவாம். பணத்த விட தங்கத்துல பாதுகாப்பு அதிகம். சுலபத்துல ட்ரேஸ் பண்ண முடியாது. மாமூ பெரிய கில்லாடிதான்.’
மாமூ எழுதிக் கொண்டே மெதுவாக ‘நீ எப்ப பாங்குக்கு போனாலும் இந்த லெட்டரை கையில கொண்டுட்டுப் போ. நீ என்ன பேரு டீடெய்ல்ஸ் கொடுத்திருந்தியோ அதையெல்லாம் எழுதிட்டேன். எக்ஸ்டிராவா ஒரு கறுப்பு ஷெல் ஃப்ரேம் கண்ணாடி போட்டுகிட்டு குறுந்தாடி வச்சிகிட்டுப் போ. கையில ஒரு பேக் வச்சிக்கோ... எந்த மாதிரி பேக்னா.....’
சுற்றுமுற்றும் பார்த்தவர் மேஜைக்கு கீழேயிருந்து சிவப்பு நிற பையை எடுத்து மேஜை மேல் வைக்கிறார்.
‘இந்தப் பையை எடுத்திட்டுப் போ. இதையெல்லாம்தான் உன் அடையாளமா இந்த லெட்டர்ல எழுதிருக்கேன். முடிஞ்சவரைக்கும் மேட்ச் பண்ணிக்க. அத்தனை தங்கமும் உனக்குத்தான்’ என்றவாறே அந்த காகிதத்தை அருகில் நிற்கும் சின்னுவிடம் கொடுக்கிறார் மாமூ. சின்னு அதை வாங்கிப் படிக்கிறான்.
இரு விநாடிகள் அமைதி.
பின்னர் மேஜை மேலிருக்கும் கறுப்புப் பையை திறந்து சோதிக்கிறான்.
கணிணி திரையிலிருந்து நிமிரும் ரோ ‘ஹா... முடிஞ்சிருச்சு ஒருவழியா...’ என்று சொல்லிவிட்டு சின்னு கையில் இருக்கும் கடிதத்தைப் பார்க்கிறான்.
‘எல்லாம் சரியாயிருக்கா? இல்ல மாமூ ஏதாவது கோக்கு மாக்கு பண்ணி வச்சிருக்காரா? பேகை செக் பண்ணிணியா?’ என்று கை நீட்டி சின்னுவிடமிருந்த கடிதத்தை வாங்குகிறான்.
’வேறெதாவது புதையல் வச்சிருக்கியா மாமூ? செத்தும் கொடுக்கும் சீமானுய்யா நீயு’ என்றவாறே கடிதத்தை நேராகப் பார்த்துக் கொண்டே உரக்கப் படிக்கிறான் ரோ.
‘இந்தப் பையில் பதினோரு கிலோ தங்கம் இருக்கிறது. காரியம் முடிந்ததும் உன் பெயருக்கு ஆத்தரைசேஷன் லெட்டர் தருகிறேன்’ படித்து முடித்தவுடன் ஒரு விநாடி உறைகிறான் ரோ. பின்னர் உயிர் வந்தது போல நிமிர்ந்து சின்னுவைக் கோபமாகப் பார்த்து ‘ஏய்... என்னது இது?’ என்று உரக்கக் கேட்கும்போதுதான்...
‘ஏழு’ என்கிறார் மாமூ.
சின்னுவின் கையிலிருந்த துப்பாக்கி ‘டுஷ்யூங்ங்ங்...’ என்று வெடிக்கிறது.

16 மறுமொழிகள்:
பிரமாதம்!
nice
கதையின் முடிவு நெருங்கும்போதே ஊகிக்க முடிகிறது. ஆனால், அதனால் என்ன?
இது ரொம்பச் சுமாரான கதைதான் ஸ்ரீதர்.
Very clever - நான் பயந்த அளவு குழப்பமாக இல்லை. அதேசமயம் ‘சாதாரண’ த்ரில்லராகவும் நீர்த்துப்போகவில்லை. வசனத்தில் சுஜாதா நிறையத் தெரிவதைக் குறையாகச் சொல்லமுடியாது :) பாராட்டுகள்!
- என். சொக்கன்,
பெங்களூரு.
‘ஏழு’ என்கிறார் மாமூ -என்பதோடு முடித்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும்.
சூப்பர் மாமூ. சரியான விறுவிறுப்பு.
வாங்க டைரக்டர் சார்!
உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி :)
வாங்க சங்கர் நாராயணன்!
//nice//
மிக்க நன்றிங்க :) ஒரு சீன் படம் மாதிரி இருந்ததுங்களா? :)
வாங்க சுந்தர்!
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//ஊகிக்க முடிகிறது//
ஆமாங்க. Open Supense Thriller வகையில வெறும் விறுவிறுப்புக்கு மட்டும்தான் டிரை பண்ணினேன்.
விடுங்க... அடுத்த கதையில (இல்லன்னா அதுக்கு அடுத்ததுல) ஒரு ‘சபாஷ்’ வாங்கிடறேன் :) வர்றேன்...வர்றேன்...
உங்க வருகைக்கும் பாராட்டுகளுக்கும், ட்விட்டரில் RT செய்தததற்கும்... உங்கள் அன்பிற்கும்... மிக்க நன்றி!
//வசனத்தில் சுஜாதா நிறையத் தெரிவதைக் குறையாகச் சொல்லமுடியாது //
:)) உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றிங்க.
வாங்க சித்திரன்,
உங்க வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிங்க.
//ஏழு’ என்கிறார் மாமூ -என்பதோடு //
செய்திருக்கலாம். ஆனால் கடைசி வரியில் சின்னு அறையில் இருக்கும் இருவரில் யாரை சுட்டிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அங்கேயும் ஒரு சஸ்பென்ஸ் தொக்கி நிற்கிற மாதிரி எனக்குப் படுகிறது (வாசிக்கும்போது). இல்லையா? ;)
விறுவிறுப்பாக நகர்ந்தது ஸ்ரீதர். பேரம் தொடங்கியவுடன் சஸ்பன்ஸ் தெரிந்துவிட்டது :)
கடைசி வரி இல்லாமல், திரும்ப வட்டமடித்து முதலிலிருந்து படித்தாலும் நல்லா இருக்கே!
//கடைசி வரியில் சின்னு அறையில் இருக்கும் இருவரில் யாரை சுட்டிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அங்கேயும் ஒரு சஸ்பென்ஸ் தொக்கி நிற்கிற மாதிரி//
ம்ஹூம், இல்லை. மாமு ஏழு சொன்னதும் சுட்டதால சின்னு யாரைச் சுட்டிருப்பார்ன்னு சுலபமா ஊகிக்கமுடியுது. இரட்டை சஸ்பென்ஸ் தேவைன்னா ‘ஏழு’ என்பதுடன் நிறுத்தியிருக்கலாம் :)
- என். சொக்கன்,
பெங்களூரு.
//ஏழு’ என்கிறார் மாமூ -என்பதோடு //
செய்திருக்கலாம். ஆனால் கடைசி வரியில் சின்னு அறையில் இருக்கும் இருவரில் யாரை சுட்டிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அங்கேயும் ஒரு சஸ்பென்ஸ் தொக்கி நிற்கிற மாதிரி எனக்குப் படுகிறது (வாசிக்கும்போது). இல்லையா? ;)//
இது இன்னும் பெட்டரா இருந்திருக்கும்ன்னு தோணுதுண்ணே :)
முடிந்தளவுக்கு சிறப்பாக செயல் பட்டிருக்கீர்கள்... வாழ்த்துக்கள்...
வாங்க கிரிதரன்!
க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த Hang 'em High பார்த்திருக்கிறீர்களா? ஆரம்பக் காட்சியிலே ஈஸ்ட்வுட்டை தூக்கில் தொங்கவிட்டு விடுவார்கள். ஹீரோவானதால் தப்பித்துவிடுவார் என்றுத் தெரிந்தாலும் ‘திக் திக்’தான் :)
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்ணா :)
வாங்க சொக்கன்!
//ம்ஹூம், இல்லை. மாமு ஏழு சொன்னதும் சுட்டதால சின்னு யாரைச் சுட்டிருப்பார்ன்னு சுலபமா ஊகிக்கமுடியுது.//
ஓ... :) நான் அந்த பாத்திரங்கள்ல ரொம்பவும் தெரிஞ்சிகிட்டதுனால புதுசா யூகிக்க முடியுது போல :)
வாங்க சென்ஷி!
//இது இன்னும் பெட்டரா இருந்திருக்கும்ன்னு தோணுதுண்ணே :)//
அது படிக்கிறவங்களுக்கு தெரிஞ்சிடும்னு நினச்சேன். பரவால்ல... கதையோட சேர்ந்து பின்னூட்டமும் படிச்சாங்கன்னா புது அனுபவமா இருக்கும் இல்லையா?
இந்தியாவில இருக்கீங்களா? நிறய நாளா பாக்க முடியல்யேன்னு நினச்சேன் :)
வாங்க அண்ணாமலையான்!
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க :)
ஒண்ணும சொல்றதுக்கில்ல... நீங்க தான் எங்க தலைவர்.....
//ம்ஹூம், இல்லை. மாமு ஏழு சொன்னதும் சுட்டதால சின்னு யாரைச் சுட்டிருப்பார்ன்னு சுலபமா ஊகிக்கமுடியுது. இரட்டை சஸ்பென்ஸ் தேவைன்னா ‘ஏழு’ என்பதுடன் நிறுத்தியிருக்கலாம் :)//
என்ற சொக்கனின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
இந்த மாதிரி க்ரைம் கதை படித்து ரொம்ப நாளானதே என்கிற ஆதங்கம் போனது போங்கள். நன்றி!
இதையெல்லாம் நட்சத்திர வாரத்தில் எழுத மாட்டீங்களே. :)
ஒரு குறும்படத்துக்கு கதை ரெடி. ஆனா திரைக்கதை அமைபப்து கொஞ்சம் சவாலான விஷயம்னு தோணுது. விஷுவல்ஸ்லயே நெறைய்ய புரிய வைக்கனும். எதுக்கும் ஒரு காப்பிரைட் போட்டு வெச்சுகுங்க. :))
வாங்க பப்பு,
நன்றி! :) பெங்களூர் அனுபவங்கள் சுவாரசியமா தொடங்கிட்டீங்கப் போல :) அடிச்சு ஆடுங்க!
வாங்க சித்ரன்,
உங்க மீள் வருகைக்கும் மீள் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க :)
வாங்க அம்பிண்ண!
விஷுவலா யோசிச்சுதான் எழுதினது. உங்களுக்கும் பிடிச்சதில மகிழ்ச்சிங்க :)
Post a Comment