August 18, 2011

பாசக்கார பயபுள்ள!

சமயத்தில் ஜூனியருக்கு அசாத்திய கோபம் வந்துவிடும். வெளியில் எலியைப் போல பம்மி பம்மி திரிபவர் வீட்டுக்குள் அவருடைய Comfort Zoneக்கு வந்தவுடன் வீரம் பொத்துக் கொண்டு வந்துவிடும்.

'டேய், டிவி அப்புறமா பார்க்கலாம். டின்னர் சாப்பிடுடா' என்று அதட்டினால், பதிலுக்கு ஒற்றை விரலை ஆட்டி, கண்களை உருட்டி மிரட்டி 'பேசாமப் போங்க அந்தபக்கம்' என்று கோபப்படுவார். எல்லாம் பத்து நிமிடங்களுக்கு முன்னால் பெற்றோர் காண்பித்த பாவனைகள்தான். அப்படியே அதை பிரதியெடுத்து புதுசாக ஃபிலிம் காட்டுவதில் சமர்த்தர். சரி, இவரிடம் உருட்டி மிரட்டி எதையும் சாதிக்க முடியாது என்று முடிவெடுத்த அம்மா எடுத்த அடுத்த ஆயுதம்தான் 'டே கேர்' (Day Care) அஸ்திரம்.

முதலில் 'உன்னை டே கேர்ல கொண்டு விடனும். அப்பதான் நீ திருந்துவே' என்று மிரட்டியபோது கொஞ்சம் எஃபெக்ட் தெரிந்தது. சட்டென அடங்கிப் போய் மம்மு எல்லாம் சாப்பிட்டு விடுவார். நாளடைவில், 'குரைக்கிற நாய்கள் கடிக்காது' என்னும் தத்துவத்தை புரிந்து கொண்டவர் தனது வழக்கமான் பாணியில்...

'சும்மா சத்தம் போடாதீங்க டாடி... பேசாம நீங்க டே கேர் போங்க' என்று திருப்பி அடிக்க ஆரம்பித்தார். ஆ...ஊ... என்று அவரிடம் சத்தம் போட்டாலும், உள்ளுக்குள் ஒரு உதறல்தான். இன்னிக்கு டே கேர் போ என்று சொல்கிறவர் நாளைக்கு 'போடா முதியோர் இல்லத்துக்கு' என்று சொல்லிவிட்டால் டங்குவார் டான்ஸ் ஆடிவிடாது? எனது அப்பாவாவது அரசு உத்தியோகம் பார்த்து பென்ஷன், கை நிறைய கிராஜுட்டி, விஆர்எஸ் என்று வெயிட்டாக ரிடயர் ஆனவர். நீயாச்சு உன் பொழப்பாச்சு என்று அவர் பாட்டுக்கு தொடர் மெகாத்தொடர்களோடு ஆனந்தமாக ஐக்கியமாகிவிட்டார். நாளதுவரையில் நமக்கு ஒரு சுக்கும் கிடையாது. இதில் எதிர்காலத்தை வேறு பகைத்துக் கொள்ளவதா என்று ஒரு லைட்டா ஒரு பதைபதைப்பு.

கோடை விடுமுறை முடித்து பள்ளி திறக்கப் போகிறார்கள் என்று பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பிற்கு அழைத்திருந்தார்கள் நேற்று. வகுப்பில் 'கரடி பொம்மை இருக்கா? ட்ரெயின் செட் இருக்கா? ஜிம்ல பாஸ்கெட் பால் இருக்கா? பாத்ரூம்க்கு என்ன கலர் பெயின்டிங்?' என்று டீச்சரை டார்ச்சர் செய்து எங்கள் ரொட்டீன் இன்ஸ்பெக்‌ஷனை முடித்துக் கொண்டோம்.

பள்ளி நிர்வாகத்தினரும் எசப்பாட்டு பாடுவது போல 'அரைடஜன் நோட்புக், ஒரு டஜன் க்ளூ ஸ்டிக் (Glue Stick), ஆறு பென்சில், ஏழு அழிரப்பர், ஆக்ஸிடெண்ட் ஏற்பட்டால் மாற்ற உடை, (சிறார்கள் எதிர்பாராமல் மூச்சா, கக்கா போய்விடுவதைத்தான் ஆக்ஸிடெண்ட் என்று சொல்கிறார்கள்), யூனிஃபார்ம், ஷூ, சாப்பாடு பை' என்று பெரிய லிஸ்ட் போட்டு 'முதல் நாளே வாங்கிட்டு வந்துடுங்க' என்று கவுண்ட்டர் டார்ச்சர் கொடுத்தார்கள்.

இன்று காலை புது சொக்காய், புதுக் குடை, புது டிபன் பாக்ஸ் என்று 'கலக்கறே ஜூனிய'ராக பள்ளிக்குப் போனவர், புதிய வகுப்பறையை பார்த்ததும் சற்று 'சுஸ்த்' ஆகிவிட்டார்.

'சானியா கூட இன்னும் வரவில்லையே... வீட்டுக்குப் போய்விடலாமா' என்று கண்கள் கலங்க, தோளைக் கட்டிக் கொண்டு இறங்காமல் தொங்கிக் கொண்டிருந்தார். பொம்மைகளை எல்லாம் காட்டி சமாதானபடுத்தி, அவருடைய வகுப்பாசிரியையிடம் ஒப்படைத்து விட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தேன். வகுப்பு தொடங்க இன்னும் ஐந்தாறு நிமிடங்கள் இருந்தது.

ஜூனியர் கொஞ்சம் கொஞ்சமாக சகஜநிலைக்கு வந்து மற்ற சிறுவர்களோடு கலக்க ஆரம்பித்தது தெரிந்தது. இன்னொரு சிறுவன் அமைத்திருந்த ரெயில் டிராக் பக்கத்தில் சிக்னல் கம்பங்களை நட்டுக் கொண்டிருந்தவர் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு வேகமாக வந்தார்.

'சீக்கிரம் போங்க டாடி. ஆபிஸுக்கு டைம் ஆகல. அப்புறம் அங்க கதவெல்லாம் சாத்திடப் போறாங்க' என்றார் பாசமாக.

இந்த பள்ளிக்கூடம் என்னும் விஷயம் மட்டும் இல்லையென்றால் அப்பாவி பெற்றோர்கள் நிலைமை என்னதான் ஆவது?

6 மறுமொழிகள்:

ILA(@)இளா said...

அட. ஒரு குறும்படம் அட்டகாசமா வருமே :)

Eswar said...

இது மட்டுமா? பத்து நாளாய் ஒரு உங்க ஜூனியருக்கு பொம்மை செயல் முறை விளக்கம் காட்ட வளையல் கேட்டு, இன்று தான் வாங்கி கொடுத்தேன்

வானம்பாடிகள் said...

=)))

ஸ்வர்ணரேக்கா said...

கலக்கல் ஜூனியர்

ஸ்ரீதர் நாராயணன் said...

@இளா - வாங்க நாளைய இயக்குநரே :) அப்பாடக்கர் எப்ப ரிலீஸ்?

உங்க வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிங்க.

நன்றிகள் @ஈஸ்வர் @வானம்பாடிகள் @ஸ்வர்ணரேக்கா :)

ஸ்ரீதர் நாராயணன் said...

இந்தக் கதையைப் பற்றி கூகுள் பஸ்ஸில் நடந்த விவாதத்தை இங்கே படிக்கலாம்.