August 19, 2011

நிராகரித்தல்

ஒன்றாவதோ இரண்டாவதோ படிக்கும்போது ஒரு முறை நான் தொலைந்து போய்விட்டேன். சிறிய ஊரின், சின்னஞ்சிறிய கோவிலின் திருவிழாவிற்காக ஆற்றங்கரை போனபோது எப்படியோ வழிதவறி வேறெங்கோ போய்விட்டேன். ஓரிரு மணி நேரங்களில் கண்டுபிடித்துவிட்டார்கள். எப்படி தொலைந்து போனேன் என்று நினைவில்லை. அப்பா ஏதோ சத்தம் போட ஓடிவிட்டேன் என்று சொல்வார்கள்.

தேம்பித் தேம்பி அழுது கண்ணெல்லாம் ஊதிப் போய், சின்ன சிரிப்போடு அம்மாவின் இடுப்பில் அமர்ந்து கொண்டிருந்த காட்சி அவ்வப்போது நினைவில் நிழலாடும். திருவிழாக் கண்ணாடி, 'டமடம'வென அடிக்கும் உடுக்கை, வாட்ச், ஊதாங்குழல் என்று நிறைய வாங்கித் தந்தார்கள்.

ஆறு வயதில் ஏற்பட்ட இந்த அனுபவத்தில், இந்தக் காட்சி மட்டும் நினைவில் அப்படியே தங்கிப் போய்விட்டது. அத்தனை விளையாட்டு சாமான்கள் ஒருசேர கிடைத்தது காரணமாக இருக்கலாம். ஆனால் பழக்கப்பட்ட அம்மாவின் மடி மீண்டும் கிடைத்ததால் ஏற்பட்ட நிம்மதி எங்கோ மனதின் அடியாழத்தில் இன்னமும் படிந்திருக்கிறது. ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் அந்த தவிப்பு துடிக்க ஆரம்பித்துவிடும். பழக்கப்பட்ட வீடு என்பதும் அம்மாவின் மடி போலத்தானே.

முதன்முதலாக சென்னையில் வீடு தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது திகைப்பாக இருந்தது. தனி வீடு அல்லது அறை பிடித்தே ஆக வேண்டிய சூழல்.

'ட்ரிப்ளிகேன்ல ஜவகர்கிட்ட சொல்லிருக்கேண்டா. அவங்க மேன்ஷன்லேயே ரூம் வருமாம் இந்த வாரம்' அங்க ஒரு ஃப்ளோருக்கு ஒரு கக்கூஸுதானே இருக்கும்... அங்க போய் எப்படி?

'ஜி என் செட்டி ரோட்டுல ஒரு அவுஹவுஸ் இருக்காம்டா. ' வாடகை கட்டுபடியாகுமா?

'கேகேநகர்ல சுனில் நாயர்னு ஒரு ஃப்ரெண்டு இருக்கான். 2 பெட்ரூம் வீடாம்' அங்க தண்ணீ கஷ்டமாமே. முன்பின் தெரியாதவரோட எப்படி வீட்டுல புழங்கறது?

இப்படி மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் தி.நகர் ரமணா மேன்ஷன் பற்றிச் சொன்னார்கள்.

'தனித்தனி ரூம். வெஸ்டர்ன் டாய்லெட் கூட உண்டு. பாட்மிண்டன் கோர்ட்லாம் இருக்கு. அமைதியான சூழல்' என்றெல்லாம் கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷமாகி விட்டது. பாண்டிபஜார் பின்புறமாம். அப்படியே வெங்கட் நாராயணா ரோடு பிடித்து அண்ணா சாலையில் கலந்துவிட்டால் ட்ராஃபிக்கை பொறுத்து பத்து நிமிஷமோ, பதினைந்து நிமிஷமோ எக்மோர் போய்விடலாம். மியூஸியத்திற்கு எதிரில்தான் ஆபீஸ் இருந்தது.

ஒரு சனிக்கிழமை காலை வழி விசாரித்துக் கொண்டு ரமணா மேன்ஷனுக்குப் போனேன். நிறைய மரங்கள் அடர்ந்து குளுமையான சூழலில் பெரிய காம்பவுண்ட் கேட்டோடு இருந்தது மேன்ஷன். இரண்டு வரிசையில் கட்டிடங்கள் இருக்க நடுவில் சிறிய பாதையில் ஒரு சின்னப் பெண் ஆண்பிள்ளை சட்டைப் போட்டுக் கொண்டு இலை குப்பைகளை கூட்டி கூடையில் போட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் தள்ளி சுவரோரமாக குத்துக்கல் ஒன்றில் வெள்ளை ரவிக்கையும் நீலப் புடவையுடனும் ஒரு பாட்டியம்மா குந்தி அமர்ந்து கொண்டு புகையிலையோ வெற்றிலையோ குதப்பிக் கொண்டிருந்தார். யாரிடம் என்னத்தை விசாரிப்பது என்று தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தேன். என்னமோ வேடிக்கையாய் அந்தப் பாட்டி சொல்ல சொல்ல, அந்தப் பெண் 'கமுக், கிமுக்' என்று சிரிப்பை அடக்கி அடக்கி சிரித்துக் கொண்டிருந்ததது. பாஷை தெலுங்காக இருக்கலாம்.

பக்கத்து மாடிப்படியிலிருந்து அதட்டலான குரலுடன் அவர் வெளிப்படவே அந்தப் பெண் அவசர அவசரமாக கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடியது. பாட்டியும் அப்படி இப்படி பரபரப்பாக கிளம்புவது போல கையைத் தட்டி புடவை தலைப்பை உதறி செருகிக் கொண்டு கிளம்பினார். உள்ளிருந்து வந்தவர் நல்ல உருண்டையாக உருளைக்கிழங்கு போல் இருந்தார். கைலியை பாதியாக மடித்துக் கட்டாமல் முக்கால் பகுதிக்கு மடித்து ஏற்றிக் கட்டியவாறு ஒருமாதிரி இடுப்பை ஆட்டிக் கொண்டே அமர்த்தலாக நடந்து வந்தவர் கண்டிப்பான குரலில் 'வாட் டூ யூ வாண்ட்?' என்றார்.

'ரூம் வாடகைக்கு இருக்குன்னு சொன்னாங்க'

'யார் சொன்னது?' என்னையே எடைபோடுவது போல் துளைத்துக் கொண்டு பார்த்தார்.

யார் சொன்னது... அந்த மேன்ஷன் பற்றி இரண்டு மூன்று பேர் மாறி மாறி சொல்லித்தான் நான் அங்கே சென்றிருந்தேன். தடுமாற்றத்தோடு...

'கதிரேசன்னு என் கொலீக் ஒருத்தர்...'

'எந்த ரூம்? எந்தக் கம்பெனி? இப்ப எங்க இருக்கீங்க...'

கதிரேசன் அங்கே தங்கியிருக்கவில்லை. அவருடைய நண்பர் சொல்லியது. அந்த நண்பரும் அந்த மேன்ஷனில் இருந்தவராக நினைவில்லை. நான் தடுமாறி தடுமாறி பதில் சொல்ல, திரும்பிய பக்கமெல்லாம் அவர் கேள்விகளோடு என்னை மடக்கிக் கொண்டே இருந்தார். அறிமுகமில்லாமல் அங்கே அறை தேடிப் போனது பெரிய குற்றம் போல என்னை நினைக்க வைத்துவிட்டார். திடீரென மனசு வந்தவர் போல...

'மூணு ரூம் இருக்கு. அக்டோபர் மாசம் இன்னொன்னு ரெடியாகும்' என்று சொல்லிக் கொண்டே திரும்பி கட்டிடத்துக்குள் செல்ல ஆரம்பித்தார். அதே ஆட்டல். அதே அமர்த்தல். நான் கொஞ்சம் உற்சாக குறைவோடு அவரைப் பின்தொடர்ந்தேன்.

மாடிப்படிக்கு பின்புறமாக கீழ்த்தளத்திலேயே 'மானேஜர்' என்று பெயர்ப்பலகையுடன் அவர் அறை இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் ஸ்விட்சைப் போட டேபிளுக்கு பக்கத்திலிருந்த பெடஸ்டல் ஃபேன் சுற்ற ஆரம்பித்தது. அது அவருடைய இருக்கையை மட்டும் குறிபார்த்து காற்று அனுப்பிக் கொண்டிருக்க மேலிருந்த சீலிங் ஃபேன் சும்மா இருந்தது. டேபிள் மேல் இன்னொரு 'மானேஜர்' போர்டு.

இருக்கையில் உட்கார்ந்தவர் மடமடவென பேச ஆரம்பித்தார்.

சத்தம் அதிகம் போடக்கூடாது. தண்ணீர் அளவாக செலவழிக்க வேண்டும். கெஸ்ட் எல்லாம் வரக் கூடாது. ஒரு நாள், இரண்டு நாள்... நோ...நோ. வரக்கூடாது என்றால் வரவேக் கூடாதுதான். இரவு பத்துமணிக்குள் ரூமுக்குள் வந்துவிடவேண்டும். அதற்கு மேல் வெளி கேட் பூட்டிவிடுவாராம். பொடி, பீடி, குடி கூடாது. நாய்க்குட்டி, பூனைக்குட்டி உட்பட எந்தக் குட்டியையும் உள்ளே கொண்டு வரக்கூடாது (அப்படித்தான் அவர் சொன்னார்). பைக் முன்பக்கம்தான் பார்க் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம் கம்ப்யூட்டர் இருக்கக் கூடாது.

'ஏன் சார்?'

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று நானே அசெம்பிள் செய்து ரிச்சி ஸ்ட்ரீட்டிலிருந்த அத்தனை சாஃப்ட்வேர்களையும் அதில் ஏற்றி வைத்திருந்தேன். லேப்டாப் எல்லாம் அப்பொழுது CEOக்கள் மட்டும் வைத்திருந்த காலம்.

'கம்ப்யூட்டர்னா, சிடி கொண்டு வரேம்பான். அதில படம் போடுவான்'

உதட்டை கோணலாக்கி தலையை ஆட்டியபடி

'டிஸிப்ளின் இருக்காது. நோ கம்ப்யூட்டர்' என்றார். 'நீயெல்லாம் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியும்'டா என்ற பார்வை. எல்லா 'கூடாது'களையும் அச்சிட்ட ஒரு பேப்பரை கையில் கொடுத்தார். மொத்தம் பதினைந்தோ பதினாறோ கண்டிஷன்கள். தலைப்பு மட்டும் 'DOs and Donts'. உள்ளே எந்த DOக்களும் இருந்ததாய் நினைவில்லை.

எனக்கு ஈர்ப்பெல்லாம் வற்றிப் போய்விட, காற்று போன பலூனாய் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். அவர் உட்காரச் சொல்லவில்லைதான். எப்படியோ நானாக அவர் முன் நாற்காலியில் உட்கார்ந்திருந்திருக்கிறேன்.

பிறகு மேஜை டிராயரிலிருந்து தேடி எடுத்த சாவிக் கொத்தோடு கிளம்பினார். மூன்றாம் மாடியில் இரண்டு படுக்கைகளோடு ஒரு ரூம். கூட இருந்த பீகாரி தி நகர் பஸ ஸ்டாண்ட் அருகே ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறாராம். அடுத்த பிளாக்கில் கீழ்த்தளத்தில் ஒரு அறை. அந்த அறைப் பங்காளியும் ஏதோ ஒரு ஓட்டலில்தான் வேலை பார்த்து வந்தாராம். நான் போன சமயத்தில் யாரும் அறையில் இல்லை. டல்லாக சோகையான சூழலோடு 'எங்கேடா வந்தே' என்பது போல் விட்டேத்தியான ரூம்.

'அதிகம் வெளிச்சமே இல்லியே... அந்தப் பக்கமா ஜன்னல் வச்சா மாதிரி ரூம் இருக்கா'

'மார்னிங் அப்படிதாம்பா இர்க்கும்' கத்தரிப்பது போல பேசினார்.

'இல்ல சார்... ஈஸ்ட் ஃபேஸிங் விண்டோ இருந்தா காலைல கொஞ்சம் பளிச்னு இருக்குமே'

அந்த அறையின் பங்காளி, ஏதோ ஈரத்துணியை உலர்த்தாமல் உள்ளேயே போட்டு விட்டிருப்பார் போல. முடை நாற்றம் அடித்து முகத்தை சுளிக்க வைத்தது. கொஞ்ச நேரம் மாறி மாறி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தவர், சட்டென...

'நீ அடுத்து அக்டோபர்ல வா. பாக்கலாம். தர்ட்டி செவன் ரெடியா இருக்கும். அப்பப் பாக்கலாம்' என்று திரும்பிக் கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்.

எனக்கோ இரண்டு வாரத்தில் வீடு மாற்றியாக வேண்டும். அக்டோபருக்கு மூன்று மாதம் இருக்கிறதே என்ற பதைப்பில்,

'மூணு ரூம் காட்டறேன்னீங்களே. இரண்டுதானே பாத்திருக்கோம்'

நடந்து கொண்டிருந்தவர் சற்று நின்றார். பிறகு பட்டென திரும்பி,

'உனிக்கு ரூம் காட்ட முடியாதுப்பா. நீ கெளம்பு' உடனடியாக தமிழில் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறியவர்,

'இத்தக் கேட்டா அதுங்கிற. அத்தக் கேட்டா இதுங்கிற. வெளிச்சம் வராதாம், கண்ணு தெரியாதாம்' கோபமும் எரிச்சலுமாய் முகத்துக்கு நேரே கையை ஆட்டி ஆட்டிப் பேசியவர்,

காம்பௌண்ட் கேட்டை நோக்கி கையைக் காட்டி 'போ..போ... உனிக்கெல்லாம் இங்க ரூமே கெட்யாது' என்றார்.

அப்படி ஒரு அப்பட்டமான நிராகரித்தலை நான் சந்தித்ததே இல்லை. குப்பென வியர்த்து விட... பதட்டமாகி விட்டேன்.

'இல்லை சார். டே லைட் இருந்தா ஹெல்த்தியா இருக்கும். இங்க என்னமோ பழைய துணியைப் போட்டு வச்ச மாதிரி ஸ்டிங்கிங் ஸ்மல்...'

'இன்னா சுமெல்லு? ஆளுங்க இருக்கத்தான் செய்யறாங்கல்ல. இன்னா ஜூலயா கொணாந்து வச்சிருக்கோம்? நீ அங்க பெருக்கற பொண்ணை சைட்டடிச்சுனுதான இர்ந்த. உன்ன உள்ள விட்டாத்தான் சுமெல்லு வரும் இங்க. நீ போ. போ. உனக்கு இங்க ரூமு கெடயாது'

அவருக்கு என்ன எரிச்சலோ என்னவோ. ஆனால் அந்த காட்டமான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் பெண் என்ற சொன்னதும் எனக்கு அந்த பாட்டியம்மாதான் முதலில் நினைவுக்கு வந்தார். பின்புதான் 'கமுக்கு கிமுக்கு' என்று சிரித்த அந்தப் பெண் நினைவுக்கு வந்தது. அவர் அறையிலிருந்து ஜன்னல் மூலமாக முன்னமேயே என்னைப் பார்த்துவிட்டுத்தான் வெளியில் வந்திருக்கிறார் போல.

பண்ணெண்டு பதிமூணு வயசு இருக்கும் அந்த பெண்ணிற்கு. என்னமோ வேடிக்கையாக சிரிக்கிறதே என்று பார்த்தால், சைட் அடிக்கிறேன் என்கிறாரே என்று கோபம் வந்தது. 'நறுக்' என எதையாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் என்ன கேட்கிறது என்று தெரியவில்லை. எதையாவது சொல்லப் போய் அவர் இன்னமும் மட்டமாக திட்டிவிட்டால் என்ற பயமும் ஏற்பட்டது. கோபமாக அவரை விட்டு விலகி ஓடிப் போய்விடலாம் என்று வேகமாக வெளியே வந்தேன். பைக்கை ஸ்டாண்ட் எடுக்கும்போது,

'மிஸ்டர்... இங்க வரிக்கும் பைக் எப்டி கொணாந்த?... அங்கத்தானே பார்கிங்னு போட்ருக்கு' அதே எரிச்சலோடு குதறலாய் வார்த்தைகள்.

திரும்பி பார்த்த போது சுவரோரக் குத்துக்கல் மேல் ஏறி மேலிருந்த ஸ்விட்ச் போர்டுக்கு எம்பிக் கொண்டிருந்தார். அது ஏதாவது மோட்டார் ஸ்விட்சாக இருக்க வேண்டும். 'வெங்கம்மா... வெங்கம்மா...' என்று சத்தம் போட்டவர் நான்காவது முறை எம்பும்போது வழுக்கி, பிடிமானம் இல்லாமல் தடுமாறி சுவர் முக்கிற்கு அப்புறமாய் போய் விழுந்துவிட்டார். அவர் விழுந்த பிறகுதான் 'தடால் புடால்' என்ற பெரும் சத்தம் கேட்டது. ஸ்டாண்ட் எடுத்த பைக்கை அப்படியே சரித்து போட்டுவிட்டு அப்புறமாய் ஓடி எட்டிப் பார்த்தால் அடுக்கி வைத்திருந்த மரப்பலகைகளை கலைத்துப் போட்டுக் கொண்டு எக்குதப்பாக விழுந்து கிடந்தார்.

அருகில் நெருங்கிப் பார்த்த போதுதான் காலில் இருந்து இரத்தம் கொட்டி செம்மண் தரையில் உறைந்து கொண்டிருந்தது. ஏதோ பெரிய ஃபர்னிச்சரை பிரித்துப் போட்ட பலகைகளாக இருக்க வேண்டும். பிடுங்காமல் விட்டிருந்த ஏதோ ஆணி குத்தி பாதத்தின் மேலிருந்து இரத்தம் கொட்ட, விழுந்த அதிர்ச்சியில் அரை மயக்கமாகி விட்டிருந்தார். அதற்குள் வெங்கம்மா வந்து விழுந்து கிடந்தவரைப் பார்த்து தெலுங்கிலேயே பதறி தெலுங்கிலேயே உதறினார்.

'தண்ணி இருக்கா... சோடா இருக்கா.. ஐஸ் வைக்கனுமே... ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்மா... டிங்சர் பஞ்சு எல்லாம் இருக்குமே....' என்றெல்லாம் உளறிய பிறகுதான் வெங்கட்நாராயணா ரோட்டு முனையில் இருந்த ஜூஸ் கடை நினைவுக்கு வந்தது. பைக்கை எடுத்துக் கொண்டு போய் டொரினோவும் கர்சீப்பில் முடிந்து வைத்த ஐஸுமாக திரும்பி வந்தேன்.

அதற்குள் வெங்கம்மா அவரை கொஞ்சம் இழுத்து சுவரோரமாக சரிந்தாற்ப்போல உட்கார்த்தியிருந்தார். அந்த சின்னப்பெண்ணைக் காணவில்லை. வேறு ஒருவருமே இல்லை. ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தவரை தோளில் சாய்த்து மெள்ள டொரினோவை வாயில் விட்டேன். விழுந்த அதிர்ச்சியில் இரத்த அழுத்தம் இறங்கி வியர்வையில் குளித்தாற்ப்போல இருந்தார்.

'உள்ளப் போயிறலாம் சார். ஃபேன் காத்துல கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாயிடலாம். டாக்டர் யாராவது இருக்காங்களா பக்கத்தில...' மேலும் மேலும் உளறல்தான் பதிலாக வந்தது.

ஐஸ் சுற்றியிருந்த கர்சீப்பால காலில் வழிந்த இரத்தத்தை துடைத்து அப்படியே சுற்றி முடிச்சுப் போட்டேன். காயம் அதிகம் ஆழமில்லை. சில விநாடிகளில் இரத்தம் உறைந்து விடும்.

'என்னாம்மா சொல்றாரு... ஒண்ணும் புரிலயே'

'அவரு பய்யன் ஒர்த்தன் காலேசு படிக்கையிலே கூட இர்ந்த பொண்ணை இஸ்துகினு ஓடிட்டாம்பா. பையன் வண்ட்டான் வண்ட்டான்னு புலம்பறாரு. ரெத்தம் போக சொல்ல ரெத்த பாசம் வராதாங்காட்டியும். இது முசுட்டு குணத்துக்கு எது கூட இருக்கும்... அதான் பிச்சிகிட்டு ஓடிட்டான்.' என்றார் வெங்கம்மா.

அவர் கையைத் தோளில் போட்டு மெள்ள தாங்கிப் பிடித்து அவர் ரூமிற்கு இட்டுச் சென்றேன். மறக்காமல் சீலிங் ஃபேனைப் போடாமல் பெடஸ்டல் ஃபேனை மட்டும் போட்டு சீட்டில் உட்கார்த்தி வைத்தேன். ஆசுவாசமாக சாய்ந்து கொண்டிருந்தவரைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் ஓரிரு நிமிடங்கள் ஓடிப் போனது. டேபிள் மேலிருந்த 'மானேஜர்' போர்டு 'சரி... நீ கெளம்பு' என்பது போல பார்த்தது.

வெளியில் வந்து கதவை சார்த்தும்போது அவர் கண்களை சந்தித்தேன். அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அவருடைய எரிச்சலான பார்வையை விட இந்தப் பார்வை தாங்க முடியாததாக இருந்தது. கதவை மூடிவிட்டு வெளியில் வந்துவிட்டேன்.

4 மறுமொழிகள்:

கவிதை காதலன் said...

ஒரு சிறுகதைக்கு உண்டான அம்சம் இந்த பதிவில் இருக்கிறது

கோமாளி செல்வா said...

ரொம்ப நல்லா இருந்ததுங்க. இயல்பாக, இடைஇடையே சில வரிகள் மிக ரசிக்க வைத்தன.

இப்படி ஒரு முடிவினை எதிர்பார்த்தேன் :)

மணிகண்டன் said...

Sridhar, Good one.

ஸ்ரீதர் நாராயணன் said...

@கவிதை காதலன் - இது புனைவுதாங்க :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@கோமாளி செல்வா @மணி - நன்றிகள் :)

இந்தக் கதையைப் பற்றி கூகுள் பஸ்ஸில் நடந்த விவாதத்தை இங்கே படிக்கலாம்.