ஒன்பதாவது வகுப்பில் புதுப் பள்ளிக்கு மாறியபோதுதான் அழகர் பழக்கமானான். சட்டென பழகும் தோழமை. பெண்களை நினைவுபடுத்தும் பெரிய கவர்ச்சிக் கண்கள். சுட்டுவிரல் சைஸுக்கு ஒரு சீப்பால் சிகையை பின்பக்கமாக வாரி வாரிவிட்டுக் கொள்வான். முடியை 'பம்'மென உயர்த்தி, பிறகு மீண்டும் மீண்டும் வாரிவிட்டு, அந்த 'பம்' அப்படியே இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து, நினைத்தாற்ப்போல மீண்டும் சீப்பை எடுத்து வாரிவிட்டு... இப்படியே ஒரு Perpetual செயல்பாட்டில் இருப்பான். சராசரிக்கு சற்று குள்ளம்தான். எம்பி தோள் மேல் கை போட்டு,
'எங்க வீடு? பை-பாஸ் ரோடு பக்கம்தானே... வா... அப்படியே டபுள்ஸ் போயிடலாம்' என்று பார்த்த இரண்டாம் நாளே சிநேகமாகி விட்டான்.
அவன் வீடு சந்திரா நகருக்கு அப்புறமாய் ரயில்வே ட்ராக்குக்கு பக்கத்தில் மீனாட்சி நகரில் இருந்தது. ஓரிரு முறை வீட்டுக்கு கூட்டிப் போயிருக்கிறான். வரிசையாக ஓட்டு வீடுகளாக இருக்கும். கொஞ்சம் வளைந்தாற்ப்போல் போய் தெரு நேராகும் முனையில் மூங்கில் படலைத் திறந்து கொண்டுப் போனால் அழகரின் வீடு. முன்னடியில் பச்சை டிஸ்டெம்பர் அடித்த ஒரு சின்ன அங்கணத்தில் அழகருக்கான பிரத்யேக இடம் இருந்தது. அதில் சின்ன கண்ணாடி அலமாரி, மர நாற்காலி, காலுடைந்து முட்டுகொடுக்கப்பட்ட மேஜை போன்ற சொற்ப வசதிகள் இருந்தது. அதற்கு ஒட்டாமல் மிச்ச வீடு இருளோ என்று இருக்கும். அந்த இருளின் நடுவில் அழகரின் அக்காவோ, அம்மாவோ தோன்றி மறைந்ததாக நினைவு.
பொதுவாக நாங்கள் அதிகம் 'டாப்' அடிப்பது சௌரி வீட்டில்தான். ரயில்வே கிரவுண்டுக்கு சமீபத்தில் அவன் வீடு இருந்ததால் கிரிக்கெட் விளையாடிவிட்டு நேராக அங்கே போய்விடலாம். எப்போதும் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த ஜில் தண்ணீர் கிடைக்கும் என்பது கூடுதல் கவர்ச்சி. அவ்வப்போது 'ஜில்' கொய்யா, 'ஜில்' கிரேப்ஸ் கூட வாய்க்கும்.
அழகருக்கான தனித்திறமையில் ஒன்று பிரபல சினிமா பாடல்களை மாற்றி சொந்தமாக பாடுவது. 'ஆடிப் பாரு மங்காத்தா... ஓடுது பார் என் மூச்சா...' என்று இழுப்பான். உடனே கூட்டத்தில் சிரிப்பு அலைபுரளும். உடனே அடுத்த கியர் போட்டு வேறொரு பாட்டை எடுப்பான். பெரும்பாலும் பாத்ரூம் சமாச்சாரமாகத்தான் இருக்கும்.
'ஆனைமலை கேம்ப்புக்கு போனபோது கூட அன்சாரியும் வந்திருந்தாப்புல. காலைல அஞ்சர்ர மணிக்கு ஃபால்-இன் ஆவனும். கருக்கல்லயே எல்லாரும் கம்மா பக்கமா போயிருந்திட்டு வந்திர்ருவோம். அன்னிக்கு பாத்தா இத்தாந்தண்டிக்கு கடப்பாரை மாதிரி பேண்டு வச்சிருந்தான்யா. எவனோ வயத்துல லேத் பட்டறை வச்சிருந்திருப்பான் போல... முறுக்கி முறுக்கி பிழிஞ்சமாரி. இவனானா இருட்டுல அரைகுறையா பாத்திட்டு பாம்பு பாம்புன்னு சவுண்டு...' கெக்கெக்கெக்னு ஒரே சிரிப்பாக இருக்கும். 'அடுத்த பேரக்ஸ்ல கருங்குண்டா காசிநாதன்னு திருச்சிலேர்ந்து வந்திருந்தான் பாரு. நாலு மக்ல தண்ணி மோண்டுகிட்டு போவான். ஆனைமலைக்கு பக்கத்தில பெரிய காசிமலையே எழுப்பிட்டான்யா'
இவனுக்கு மட்டும் எங்கேர்ந்துதான் இப்படியெல்லாம் கண்ணில் படுகிறதோ என்றிருக்கும். இப்படியான கதைகளில் ஒன்றுதான் அழகர் சொன்ன 'விக்ரோம்'.
மூணாவதோ நாலாவதோ ஏதோ ஒரு வகுப்பில் குமாரி மிஸ் கிளாஸ் எடுக்கும்போது அது நிகழ்ந்ததாம். வரிசையாக காம்போஸிஷன் நோட் வைக்க எலாரும் நின்றிருக்க, அழகருக்கு முன்னால் சௌரி. 'நெக்ஸ்ட்' என்று குமாரி மிஸ் கூப்பிட்டாராம். சௌரி ஒரு அடி எடுத்து வைக்க 'பீயோங்க்க்' என்று ஒரு சத்தம். அடுத்த ஓரிரு நொடிகளில் அபான வாயுவின் நாற்றம் மூக்கை துளைக்க குமாரி மிஸ் கையிலிருந்த நோட்டு புத்தகத்தை மேஜையில் தூக்கிப் போட்டுவிட்டு மூக்கைப் பொத்திக் கொண்டு வகுப்பறையிலிருந்து வெளியேறி விட்டாராம். அப்பொழுது கமல் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வெளிவந்து ஓரிரு வருடங்கள் ஆகியிருந்ததாம். அதில் வரும் பாடலான 'விக்ரோம்' ட்யூனைப் போலவே அந்த 'பீயோங்க்க்' சத்தம் இருந்ததாம். இன்றும் சௌரியிடம் 'விக்ரோம்' பாட்டைப் பாடினால் செம டென்ஷனாகிவிடுவான் என்று சிரித்தான் அழகர்.
'யாரு? நம்ம சௌரியாடா?' என்றுக் கேட்டால் அழகர் இன்னமும் அதிகமாக சிரித்தான்.
இதைப் பற்றியெல்லாம் சௌரியிடம் நேரில் கேட்டதில்லை. ஆள் பார்க்க நல்ல மெலிவாக 'டேக் வோண்டா' எல்லாம் கற்றுக் கொண்டு, எதைத் தின்றாலும் ஜீரணிக்கிற ஆசாமி போல்தான் இருந்தான். எதையும் 'பட்'டென போட்டு உடைப்பது போல பேசிவிடும் 'நோ நான்சென்ஸ்' பேர்வழி. எனக்குதான், இந்தக் கதையைக் கேட்ட பிறகு சௌரியைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு மூலையில் 'விக்ரோம்' ஓடும். 'நான் மொச்சை தின்றவன்... முட்டை கோஸை முழுங்கியவன்' ச்சைய்ய்.. எல்லாம் அழகரின் பாதிப்பு.
ஆனால் சௌரிக்கு இந்த அபான வாயு மேட்டர் மேல் ஒரு அப்ஸெஷன் இருக்கத்தான் செய்தது. நல்ல 'கணகண'வென வெங்கலக் குரலில் அழுத்தந்திருத்தமாக,
'யாரு சொன்னா? அவனப் போய் குசுவைக் குடிக்கச் சொல்லு. முப்பத்தஞ்சுக்கு மேல அடிச்சதே இல்ல. இதில ஓப்பனிங் ஆடனுமாக்கும்' என்பான்.
எம்.ஆர். போர்டு பக்கமாக திரும்பி பயாலஜி பாடத்திற்கான படம் வரைந்து கொண்டிருப்பார். பையன்கள் இங்கே சமிக்ஞையில் கமெண்ட் அடித்துக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் உயர்ந்து எம்.ஆர். காதுக்கு போனவுடன் அவர் அதட்டலாக 'டேய்! என்னடா சத்தம்' என்பார். சௌரி உதட்டசைவிலேயே 'குசு' என்று சொல்லி வலது கையை 'ஆர்ச்' போடுவது போல் முன்னேக் கொண்டு வந்து விரலை மேஜையில் குத்தி சொல்வான். ஒரு பழைய படத்தில் ரஜினி 'இது எப்படியிருக்கு' என்று நக்கல் அடிப்பாரே... உடனே கிளுகிளுவென சிரிப்பு ஓடும். இடுப்பில் கை வைத்தபடி எம் ஆர் திரும்பிப்பார்க்க எல்லாரும் அமைதியாகிவிடுவார்கள்.
இரண்டு வருடமாக இந்த 'விக்ரோம்' கதையை முன்வைத்து சௌரியை ஆய்வு (ஆராய்ந்து என்று சொல்லியிருக்கலாமோ) செய்து பார்த்ததில் சந்தேகத்தின் சாதகத்தை சௌரிக்குதான் கொடுக்க வேண்டியிருந்தது. அவன் பேச்சில் அவ்வப்போது 'கப்பு' அடித்தாலும் அவன் நடவடிக்கைகள் நறுவிசாகவே இருந்தது.
சில சமயம் சௌரியின் வீட்டுக்கு போகும்போது, வரது தாத்தா 'டேய்... போய் பிச்சைக் கடையில இருந்து கோலி சோடா ஒண்ணு... ஒடைக்காம வாங்கிட்டு வாடா' என்று எங்களில் யாரையாவது ஏவுவார். வாயு பகவான் அவரது வயிற்றில் வலது கால் வைத்து நுழைந்து வலமும் இடமுமாக சுற்றி வருகிறார் என்று அர்த்தம்.
'வரது தாத்தா, வருது வருதுன்னு ஆரம்பிச்சிட்டாப்ல. இப்ப வருமோ எப்ப வருமோ...' என்று அழகர் பாடுவான்.
'ம்மம்மா... மொறுமொறுன்னு இருந்ததுன்னு ரெண்டு எக்ஸ்ட்ரா போண்டா சாப்பிட்டுட்டேன் போல. காலைலேர்ந்து வயிறு புருபுருன்னே இருக்கே. ஜெயந்தியோட உருளைக்கிழங்கு போண்டா மட்டும் நாஸாவில வச்சா செலவே இல்லாம எல்லாருமே சந்திர மண்டலத்துக்கு போயிட்டு வந்திடலாம்டா... ஹம்மா...' இடுப்பை அசைத்து நெளித்து வாயுவின் மையத்தை தேடி உணரும் முயற்சியில் இறங்குவார். பிஸிக்ஸ் பாடத்தில் ஆறாவது சாப்டரில் ராக்கெட் மோஷன் (மெக்கானிஸம்னு சொல்லியிருக்கலாமோ) பற்றி படிக்கும் போதுதான் அவருடைய நாஸா ஜோக்கு முழுவதுமாக புரிந்தது.
சௌரியின் தாத்தாவின் அவஸ்தையை நேர் எதிர்திசையில் நான் அனுபவித்தது பதினோராம் வகுப்பில் எஜுக்கேஷன் டூர் போன போதுதான். எம்.ஆர்.தான் டூர் ஆர்கனைஸர். தலைக்கு நூற்றைம்பது ரூபாயோ என்னவோ வாங்கிக் கொண்டு 'சம்போ டிராவல்ஸ்' என்று ஒரு பாடாவதி டிராவல்ஸில் பெங்களூர், மைசூர், ஊட்டி என மூன்று நாட்கள் சுற்றிக் காட்டினார். நானும் முத்துராஜும், பெங்களூரில் கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் சிரித்து சிரித்துப் பேசிய ஸேல்ஸ் கேர்ளிற்காக ஆளுக்கு ஒரு மஃப்ளர் வாங்கிக் கொண்டது நினைவிருக்கிறது. மற்றபடி சொல்லி சிலாகிக்கும்படி அந்த டூரில் ஒன்றும் நிகழவில்லை.
மூன்றாவது நாள் ஊட்டியிலிருந்து கிளம்பு முன்னர் எம்.ஆர் 'அடுத்து ஏழு மணி நேரத்துக்கு பஸ் எங்கேயும் நிற்காது. இப்பவே நல்லா சாப்பிடுக்க' என்று அறிவிக்க எல்லோரும் அள்ளி அடைத்துக்கொண்டு கிளம்பினோம். பஸ் கிளம்பிய அரைமணிக்கெல்லாம் ஷம்ஸுதின் சாப்பிட்ட இரண்டு முட்டைகளை நான்காக வாந்தி எடுத்துவிட்டு பின்னாடி சீட்டில் போய் படுத்துவிட்டான். அடுத்து 'ஏக் தோ தீன்' என்று வீடியோவில் மாதுரி ஆட, கூடவே குத்தாட்டம் போட்ட எம்.ஆர் பின் சீட்டுக்குப் போய்விட்டார்.
'நைட்டு சாப்பிட்ட பரோட்டா எதுத்துகிட்டு வருது போல'.
அப்புறம் வரிசையாக ரஞ்சன், குமரன், ரூபின் என்று எல்லாரும் பின்பக்கம் வர... வேறு வழியில்லாமல் நான் முன்னே நகர்ந்து அழகர் சீட்டுக்கு அருகில் அமர்ந்தேன். வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த அழகர் மெள்ளமாக,
'என்னடா, வவுறு சரியில்லையா என்ன... டூர் மூச்சூடும் பின்சீட்டிலேயே இருந்த'
'இல்லடா. ஜன்னலோர சீட் அங்கதான் கெடச்சது. வீடியோ சவுண்டு ஜாஸ்தியா இருக்கு இங்க'
என்னைப் பார்த்து திரும்பியவன்
'மூணு நாலா கக்குஸுக்கே போவாம இருந்தியா... அதான் வவுறு எதுவும் அடச்சிக்குச்சோன்னு நெனச்சேன்'
நான் பதில் எதுவும் சொல்லவில்லை.
'உங்கூட்ல நல்ல பெரிய கக்குஸா?'
ஏண்டா அவன் பக்கத்தில் உட்கார்ந்தோம் என்பது போல இருந்தது. இதைப் பற்றி ஏதாவது கிண்டல் செய்து ரவுசு விடுவானோ என்று பயமாக இருந்தது.
'அதான் வெளில போக வெக்கப்படறியாக்கும்... இதெல்லாம் அடச்சுக்கக் கூடாதுடா. அப்புறம் மூலம் பாஞ்சிரும். எங்க அம்மா அப்படித்தான். ரெயில்வே டிராக்காண்ட ஒக்கார வெக்கப்பட்டுகிட்டு போவே போவாது. இப்பபாரு பைல்ஸ் வந்து ரெம்ப கஷ்டமாப்போச்சு'
அழகரின் சிறிய ஓட்டு வீடு நினைவுக்கு வந்தது. அங்கே எங்காவது ஒரு முக்கில் பாத்ரூம் இருந்திருக்க வேண்டும். இல்லாமலும் இருந்திருக்கலாம். யதேச்சையாக சௌரியின் குரல் முன்னே இருந்து வர அழகர் கவனம் திரும்பியது. நல்லவேளை என்று மூச்சு வந்தது.
'டேய்... அழகர்... இங்க பாரு'
திரையில் 'விகரம்' என்று வெட்டி வைத்த எழுத்துகள் ஒன்று சேர கமல் 'விக்ரோம்' என்று பாட ஆரம்பித்திருந்தார்.
அதற்கு மேல் என்னை குத்திக் கிண்டாமல் அழகர் சிரித்தவாறே 'பீயோங்க்' என்று குரல் கொடுத்துக் கொண்டே எழுந்து முன்னே ஓடினான். சிலர் பஸ்ஸின் நடுவில் நின்றுகொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
'குமாரி மிஸ் கிளாஸ்ல...' என்று அழகர் எடுத்துக் கொடுக்க சௌரி பெரிதாக சிரித்தான்.
'அது சரியான குசுமாரிடா. லஞ்ச்க்கு ராஜாங்கம்கிட்ட சொல்லி நாலு வாழக்கா பஜ்ஜிய வாங்கி மொசுக்கிட்டு இடுப்பை இடுப்பை ஆட்டிகிட்டு உக்காந்திருந்துச்சு. கரெக்ட்டா எம் முன்னாடி அவுத்து விட்டா பாரு ஆட்டம் பாமை'
அழகர் மீண்டும் 'பீயோங்க்க்' என்று சத்தம் போட்டு அவன் பாணியில் பாடிக்கொண்டே போனான். பிறகு சௌரியின் தோளில் கை வைத்து...
'கிளாஸே மூணு நிமிஷத்துக்கு மூச்சடச்சு நின்னுட்டோம்ல. எம் மூக்கெல்லாம் பொசுங்கியேப் போச்சு சௌரி' என்று அபிநயத்தோடு பேசிக் கொண்டிருந்தான்.
'விக்ரோம்' கதை இப்படித்தான் முடியும் என்று ஒருவகையில் எதிர்பார்த்து இருந்தேன். அழகர் அருகில் இல்லையென்றாலும், ஜாக்கிரதையாக ஜன்னலை நன்றாக திறந்து வைத்துக் கொண்டுவிட்டு........ வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
8 மறுமொழிகள்:
ஏன்யா இப்படி? நாத்தம் புடிச்ச பதிவுய்யா :)
இந்தக் கதையைப் பற்றி கூகுள் பஸ்ஸில் நிகழும் விவாதம் இங்கே படிக்கலாம்.
//கூகுள் பஸ்ஸில் //
அங்கே வர முடியாதுங்க. இருக்கட்டும்
இளமபருவத்தெக்கேயுரிய இயல்பான நகச்சுவை இழையோடினாலும், அ.வெண்ணிலா-வின் 'வெளிய' என்ற சிறுகதை வாசித்தபோது, ஏற்பட்ட உணர்வு ஏற்படுகிறது.
சூப்பர்ண்ணே!
@இளா - உங்க உடனடி கமெண்டுக்கு மிக்க நன்றி :)
@ராஜு - // அ. வெண்ணிலாவின் 'வெளிய' // அது படிச்சதில்லை. ஆனா நீங்க சொல்றதை வச்சுப் பாக்கும்போது நீங்க கதையை நெருக்கமா வந்திட்டீங்கன்னு உணர முடியுது. ரொம்ப நன்றிகள்ங்க :)
இந்த சிறுகதையை வைத்து கூகுள் பஸ்ஸில் நடந்த விவாதத்தில், பதிவர் மற்றும் உலக சினிமாக்களை விமர்சித்து, உள்ளூர் சினிமாக்களை கிழித்து தொங்க விடும் நண்பர் சுரேஷ் கண்ணனின் கமெண்ட்...
>>>>>>>>>>>>>>
ஸ்ரீதர் நாராயணன்: இந்தப் பதிவு அவ்வளவா எனனை இம்ப்ரஸ் செய்யலை. (நிச்சயமா குசு காரணமில்லை) இரா.முருகனோட 'வாயு' படிச்சுப்பார்க்கலாம். மேற்பார்வைக்கு கொஞ்சம் அருவருப்பாவும் நகைச்சுவையாவும் இருந்தாலும் உள்ள ஆழமா இருக்கற விஷயம் நெகிழ வைக்கும். இப்படி நீங்க மனசுக்குத் தோணின ப்ளோல துண்டு துண்டா எழுதிட்டுப் போகாம, ஆரம்ப,நடு முடிவு எல்லைகளை ஸ்கெட்ச் பண்ணிக்கிட்டு பக்காவா ப்ளான் செஞ்சு எழுதினா கச்சிதமான வடிவம் கிடைக்கணும்னு தோணுது. (உங்களுக்கு நல்ல ப்ளோல எழுத வருதுன்றதால இதைச் சொல்றேன். அட்வைஸ்லாம் இல்ல) :)
<<<<<<<<<<<<<<<
நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரின் பதில்:-
>>>>>>>>>>>>>>>>>>
சு.க, நீங்க சொன்ன அந்த நெகிழ்ச்சித் தன்மை இந்தக் கதைல ரொம்ப subtle ஆ இருக்கு. அதனாலதான் எனக்குப் பிடிச்சிருக்கு
<<<<<<<<<<<<<<<<<<
இரா முருகனின் 'வாயு' குறுநாவல் 2003ல் திண்ணை இதழில் வெளியாகியது. அப்பொழுதே நான் அதை படித்திருந்தேன். அருமையான கதை. திண்ணை தளம் மாற்றியமைக்கப்பட்டதனால் பழைய கதைகளை தேடி எடுப்பது கடினம். கூகுளின் உதவியோடு மீட்டெடுத்தத கதை இங்கே.
வாயு (குறுநாவல்)
ஆசிரியர்:- இரா முருகன்
அத்தியாயம் - 1
அத்தியாயம் -2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அருமையான பியியஈங்க்க்....
உங்கள் பகிர்வுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment