August 29, 2011

பாவனைகள்

விதியின் சவாரி
===================

உயர உயரத்தில்
காற்றில் பிய்த்து எறியப்படும்
வேகத்தில்
சுற்றி சுற்றி சுற்றி
கடுமையான கண்காணிப்புகளோடு
மூடிய பெட்டிகளில்
நிற்காமல் ஓடுகிறது
யாருடையோ விதியோ.


வ்லசை
==========

சின்னப் பாப்பாவை சுற்றி
தத்தி தத்தி வந்த
கூரான அலகும் வயலெட் நிற வாலும்
வளைந்த நகங்களும் கொண்ட பறவை
துண்டை உதறிப் போட்டதும்
நினைப்பு வந்தாற்ப்போல
தன் குஞ்சைத் தேடி
பறந்து போய்விட்டது


கைதட்டல்
==============

நெருப்பு இறக்கைகளுடன்
நீரில் மேல் நடனமாடும் ரஷியள்,
சாகச சிவப்பிந்தியர்கள்,
சிரிக்கும் டால்ஃபின்கள்,
அம்பு போல் செலுத்திக்கும் ஆண்,
அந்தரத்தில் தோன்றி
ஆழத்தில் மறையும் ஜோடிகள்,
கைகாட்டலுக்கேற்ப
வட்டமிட்டு வரும் ராஜாளிகள்,

அத்தனை பேரும்
ஆரட்டோரியாவின் நாதங்களுக்கு
ஒத்திசைந்து அற்புதமாய்
உச்சத்தை எட்ட,
எட்ட,
கைக்கு அருகே படபடத்துப் போகுது
பட்டாம்பூச்சி.

(Shamu)
=============

ஐந்தரை இராத்தல் மீன் இறைச்சி
போனஸாம்,
சுற்றி சுழன்று
குட்டிக்கரணம் அடித்து
துடுப்புகளால் கைதட்டி
வாலால் நீரை விசிறியடித்து
மனுஷக் கூட்டத்திற்கு
வேடிக்கை காட்டும் திமிங்கலமாம்.
செம சூட்டிகையாம்.
பெயர் ஷாமுவாம்.
பார்த்திருக்கிறீர்களா என்று
கண்கள் விரியக் கேட்டார்.

ஷாமுவின் தம்பி ராமுவை
பார்த்திருக்கிறீர்களா
எனக் கேட்டேன்.


பாவனைகள்
=============

யாருக்கோ உத்தரவாதம்,
இன்னொருவருக்கு முகமன்,
நண்பர்களுக்கு நல்வரவு தவறாது.
தவறவிட்டதற்கு மன்னிப்பும் கேட்பதுண்டு.
நீள நீளமான வாக்கியங்களில்
தன்னந்தனியே உரையாடிக் கொண்டிருக்கிறான்
முகமிலிகளுடன்.

இறுதியில்
பெயரைச் சொல்லி
மூடுகிறான் ஃபோனை,

இவனைப் போலவே...

2 மறுமொழிகள்:

இராமசாமி said...

ரொம்ப பிடிச்சுருக்கு ஸ்ரீதர் சார்....

ஸ்ரீதர் நாராயணன் said...

நன்றி இராமசாமிண்ணே... :)

இந்தக் கவிதைகள் பற்றி கூகுள் பஸ்ஸில் படிக்க இங்கே சொடுக்கவும்