September 12, 2011

குமான் குத்து

பள்ளி காலத்தில் ஏதோ ஒரு முழுப்பரீட்சை விடுமுறையில் எழுத்துக் கூட்டி தமிழ் கதை புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கில புத்தகங்கள் படித்ததெல்லாம் கல்லூரிக் காலத்தில்தான். அதுவும் விறுவிறு கதைப் புத்தகங்கள்தான் பெரிதும் ரசிக்கும். ஏதோ ஒரு டிவியில் ரேவதி சங்கரன் 'குழந்தை மேதை' என்று அறிமுகபடுத்த, தம்மாதூண்டு நண்டு சிண்டுகள் எல்லாம் அநாயசமாக புத்தகத்தை விரித்து வைத்து 'கடகட'வெனப் படிக்கும்போது நெஞ்சம் விம்மும். அநியாயமாக ஒரு குழந்தை மேதையை இந்த லௌகீக உலகம் இப்படிக் குப்புறப் போட்டு மிதித்து தத்தாரியாக்கி விட்டதே. இந்த உணர்ச்சி கொந்தளிப்பில் திரும்பிப் பார்த்தால் ஜூனியர் பலூனை பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார். வாடி மகனே வா...

'ஆரம்பக் கல்வி என்பது பிந்தைய கற்கும் திறனுக்கு முக்கிய அடித்தளம்' என்றுத் தொடங்கி 'ஆரம்பிச்சிட்டாண்டா' என அசுவாரசியக் கொட்டாவி விடும் மனைவியின் முகத்தைப் பார்த்தவுடன் கியரை மாற்றி 'அப்படின்னு சொல்றார் நோபல் பரிசு பெற்ற ஜேம்ஸ் ஹெக்மேன்' என்று நேம் ட்ராப்பிங் மூலமாக இம்ப்ரெஸ் செய்து... அவரும் பொறியில் மாட்டிக் கொண்டார். வட அமெரிக்காவில் பிரபலமான Kumon என்னும் பாடதிட்டத்தில் ஜூனியரை சேர்த்துவிட முடிவு செய்தோம். நான்கரை வயதில் நாம எல்லாம் படுக்கையில் உச்சாத்தாண்டா போய்க்கிட்டிருந்தோம் என்று மனசாட்சி இடித்துரைத்தாலும்

'அதெல்லாம் அந்தக் காலம். இப்ப அப்படியா இருக்கு? பொறுப்பான பெற்றோரா புள்ளகளை அவையில் முந்தியிருக்க ஆவன செய்வோம்' என்று கோரஸாக பிரதிக்ஞை செய்தோம். எதிர்வரும் புயலை அறியாமல் ஜூனியரும் லாலிபாப் சாப்பிட்டுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்.

அருகாமையிலுள்ள குமான் சென்டருக்கு சென்றால் ஒரு ராஜஸ்தானிய கர்க் அம்மணி 'பையனுக்கு என்ன வயதாகிறது?' என்றுக் கேட்டார். நான்கரை என்றவுடன் அசுவாரசியமாக தலையாட்டிவிட்டு 'இவ்ளோ வருஷம் வேஸ்ட் பண்ணிட்டீங்களே. ஜூனியர் குமான் மூணு வயசிலேர்ந்து தொடங்கலாமே' என்று எங்கள் குற்ற உணர்ச்சியை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்தார். கையோடு அவர் காட்டிய புத்தகங்கள் எல்லாம் அருமையாக இருந்தது. நிறைய படங்கள் போட்டு உச்சரிக்க ஏற்ற குறிப்புகளோடு சின்ன சின்ன வார்த்தைகளும், அதை வாக்கியத்தில் கோர்த்து சொல்ல வசதியான குறிப்புகளோடும் நன்றாகத்தான் இருந்தது புத்தகங்கள்.

'வாரத்திற்கு இரண்டு நாள் இங்க வந்தாப் போதும். நாங்களே கூட உக்காந்து வாசிக்க சொல்லிக் கொடுப்போம். இருபது நிமிஷம்தான் ஆகும்'. அப்பாடா வாரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கும் கம்மியாத்தான் செலவு ஆகும். அதிக பாரம் இல்லை என்று நிமிர்ந்தால் கையோடு ஏழு புத்தகங்கள் கொடுத்தார்கள். ஒவ்வொன்றும் பத்து பக்கங்களுக்கு இருந்தது.

'தினத்துக்கு ஒண்ணுன்னு நீங்க வீட்டுல சொல்லிக் கொடுத்து பயிற்சி கொடுங்க'. ஆஹா... தினம் ஒரு புத்தகமா என்று பரிதாபமாக ஜூனியரைப் பார்த்தேன். இப்பொழுது ஆரஞ்சு நிற லாலிபாப்பை சப்பிக் கொண்டிருந்தார். சரி... கொடுத்த காசிற்கு புத்தகமாவது கொடுக்கிறார்களே. எப்போ வேண்டுமானாலும் படிக்கலாம். ஜூனியர் பெரியவராகி ப்ரிண்ஸ்டனிலோ, ஸ்டான்ஃபோர்டிலோ ரிசர்ச் படிப்பு படிக்கும்போது இந்த புத்தகங்களை பாதி விலைக்கு விற்று ஒரு 97ம் வருட ஃபோர்டு காரை வாங்கி பரிசாக கொடுக்க ஆச்சு என்று மனக்கோட்டை கட்டி நிமிர்ந்தால், 'நெக்ஸ்ட் வீக் வரும்போது இந்த புக்ஸ் எல்லாம் திருப்பிக் கொடுத்திடனும். அத வச்சுதான் உங்க பிள்ளையோட முன்னேற்றத்தை கணிப்போம்' என்றார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால், கழிக்க எதுவும் மிச்சமில்லை என்று புரிந்தது.

தினத்துக்கு இருபது நிமிடங்கள்தான் ஆகும் என்றபோது நாங்கள் நம்பவில்லை. அதெப்படி ஒரு சின்னக் குழந்தை, இருபது நிமிடத்தில் பத்து பக்கங்களை படிக்க முடியும்? அதுவும் ஜூனியர் படங்களைப் பார்த்து சொந்தக் கதை சுற்றிதானே பழக்கம் தவிர, எழுத்துகள் என்னும் சிறிய சட்டகத்தில் அடங்க மாட்டார். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் என்று நினைத்து அதற்கேற்ப ஷெட்யூல் போட்டுக் கொண்டோம்.

ஜூனியர் தின்றுகொண்டிருந்த லாலிபாப்பை முடித்துவிட்டாரா, டிவியில் வடிவேலு காமெடி முடிந்துவிட்டதா, அன்றைய கோட்டா சைக்கிள் ஓட்டம் முடிந்துவிட்டதா, பார்க்கில் அவருடைய ஃபேவரைட் குக்கிங் விளையாட்டெல்லாம ஆச்சா என்று சர்வ ஜாக்கிரதையாக யோசித்துவிட்டு ஒருவருக்கொருவர் கண்ணைக் காட்டிவிட்டு மெதுவாக குமான் செய்ய வேண்டுமே என்று ஆரம்பிப்போம். ஹெர்மியானி கிரேஞ்சர் செய்வது போல கெட்டியான "மாய" பாதுகாப்பு சுவரில் பட்டு தெறித்து விழும் எங்கள் அஸ்திரங்கள் எல்லாம். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் விஸ்வரூபம் எடுக்க தொடங்கும்போது கோலியாத்தை மடக்கும் டேவிட் போல,

'நான் அம்மாக்கூடத்தான் செய்வேன்' என்று சொல்லிவிட்டு 'காவலன்' வடிவேலு அயர்ன்பாக்ஸை தேடுவதைப் பார்க்கப் போய்விடுவார். அம்மா கேட்கும்போது அவருடைய அப்பா பாசத்தை வெளிப்படுத்திவிட்டு க்யூரியஸ் ஜார்ஜின் குரங்கு சேட்டைகளை பார்க்கப் போய்விடுவார். சிங்கம், மாடு கதைப் படித்து கூட்டணியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட நாங்கள் சேர்ந்து போய் 'இப்ப செய்யப் போறியா இல்லியா' என்று சட்டையைப் பிடித்தால், விட்டுக் கொடுப்பது போல் வழிக்கு வருவார்.

'Aன்னா ஏ-ன்னு சொல்லக் கூடாது. A சவுண்ட்ஸ் லைக் - அ. ஆ இல்லடா. நடுவாந்திரமா 'அ'ன்னு சொல்லு. Uன்னு வந்தா யூன்னு சொல்லாத. U சவுண்ட்ஸ் லைக் - அ' குழப்பமாகவே பார்த்தார். நாங்களும் விடாமல்....

'Yன்னு வந்தா மோஸ்ட்லி ஐன்னுதான் சொல்லனும். Iன்னு வந்தா இ-ன்னு சொல்லனும். Eன்னு வந்தா எ-ன்னு சொல்லனும்' இப்ப எங்களுக்கே சற்று குழப்பமாகிவிட்டது.

முதல் பக்கம் சற்று ஆர்வமாகப் போகும். அடுத்த பக்கத்திலே தி-நகர் துரைசாமி சப்வேயில் பிரேக்-டவுனான பஸ் போல மொத்தமாக ஸ்விட்ச் ஆகிப் போய் விளையாடப் போய்விடுவார். ட்ராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்ட பப்ளிக் போல அப்பாவும் அம்மாவும் பொறுமையோடு காத்திருக்க வேண்டியதுதான்.

'இ...க்...எ.... இகே'

"இல்லடா அது iceடா. இங்கே C 'க்'னு வராது. 'ஸ்'தான்." இப்படி அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால் அடிப்படை விதிகள் மேல் நமக்கே நம்பிக்கை வருவதில்லையே. போதும் போதாதற்கு எழுத வேறு வேண்டும். எல்லாம் சிற்றெழுத்துகளாக a,g,d,r என்று இருக்கும். பெரிய எழுத்து வடிவத்திற்கு சற்றும் தொடர்பில்லாத சிற்றெழுத்து வடிவங்கள். முதலில் சிறிய 'a'வும் பிறகு பெரிய 'D'யும் எழுதி புதிய வரி வடிவத்தை உருவாக்குவார். ஜூனியரின் தலைக்குள் எட்டிப் பார்த்தால் எழுத்துகளின் மாதிரி வடிவங்களாக ஏகத்திற்கு கொட்டிக் கிடக்கும்.

குறைந்தது இரண்டு இரண்டரை மணி நேரப் போராட்டமும், சில இடித்துரைத்தல்கள், மிரட்டல்கள், அழுகைகள், சமாதானபடுத்தல்கள், சாக்லேட்கள் எல்லாம் செலவழித்து ஒரு புத்தகத்தை முடித்து நெற்றி வியர்வையை வழித்துவிட்டுக் கொள்வோம்.

'இவ்வளவு நேரம் என்னோட உக்காந்து மூக்குப் பொடி, மொளகாப்பொடி விளையாட்டெல்லாம் விளையாடிட்டு இப்ப என்ன வாத்தி போல உட்கார்ந்துகிட்டு அலப்பறை விடற' என்று சொல்வது போல் இருக்கும் அவருடைய பிடிவாதம். அந்த மாதிரி நேரங்களில் நானும் ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு அவரைப் போல எழுத்துக் கூட்டித் தடுமாற, வேகவேகமாக நம்மைத் திருத்துவார். வாத்தியாருக்கு பொறந்த புள்ளப் போல.

இந்த திணிப்புகளும், தள்ளுமுள்ளுகளும் பிஞ்சு மனதிற்கு தேவையா எனத் தோன்றும் தருணங்களும் உண்டு. இந்தப் போராட்டங்களின் நடுவிலும் ஒரிரு லெவல்கள் தாண்டி தானாக எழுத்துக் கூட்டி வாசிக்கும் திறனை ஓரளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த தினப்படி வாசிக்கும் திட்டத்தை எவ்வளவு சுவாரசியமாக்க முடியுமோ அவ்வளவு சுவாரசியமாக்கிக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

இதே பிள்ளைகள்தான் என்றாவது ஒருநாள் 'யூ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் எமினெம்? யூ பீப்பிள் ஆர் அன்-பிலீவபிள்' என்று நம்மை முற்று முழுவதுமாக நிராகரிக்கப் போகிறார்கள்.

12 மறுமொழிகள்:

JOTHIG ஜோதிஜி said...

நீங்கள் நிறைய எழுதுவதில்லை என்ற வருத்தம் எப்போதும் எனக்குண்டு. இது போன்ற அனுபவங்களை எந்த பத்திரிக்கை தரும்? வலைபதிவுகள் இந்த வகையில் வரப்பிரசாதம் தானே?

ஸ்ரீதர் நாராயணன் said...

ஜோதிஜி - மிக்க நன்றிங்க :)

>> வலைப்பதிவுகள் இந்த வகையில் வரப்பிரசாதம்தானே << உண்மைதான். நான் அதிகம் வாசிப்பது இணையத்தில்தான். நிறைய புதிய விஷயங்கள் அறியக் கிடைக்கின்றன.

ஆனால் நிறையத் தேடி, தேர்ந்தெடுத்துதான் வாசிக்க வேண்டியிருக்கிறது :)

ஸ்ரீதர் நாராயணன் said...

Google Buzzல் இந்தப் பதிவினைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்ல குமான் வந்துச்சு..

பையன் ரெண்டுபேருக்கும் குடுக்கும் டிமிக்கி சூப்பர்..

ஸ்ரீதர் நாராயணன் said...

முத்துலட்சுமிக்கா,

>> பையன் ரெண்டுபேருக்கும் குடுக்கும் டிமிக்கி சூப்பர் << :))))

ப்ரிட்ஜ்வாட்டர் கோவில்ல சந்தச்சப்புறம் இப்பதான் நம்ம ப்ளாக் பக்கம் வந்திருக்கீங்க. நன்றீஸ்! :)

ஸ்வர்ணரேக்கா said...

//நம்மை முற்று முழுவதுமாக நிராகரிக்கப் போகிறார்கள்.//

இவ்வளவு உறுதியா சொல்றீங்களே!!

இராஜராஜேஸ்வரி said...

"குமான் குத்து"- சூப்பர் பஞ்ச்..

ஸ்ரீதர் நாராயணன் said...

>> இவ்வளவு உறுதியா சொல்றீங்களே << நாம செய்யலயா என்ன? எல்லாம் ஒரு தீர்க்கதரிசனம்தான் ஸ்வர்ணரேக்கா :))

ஸ்ரீதர் நாராயணன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி :)

கணேஷ் said...

மிகவும் அருமை.

ஸ்ரீதர் நாராயணன் said...

நன்றி கணேஷ் :)

அது ஒரு கனாக் காலம் said...

அருமை.