September 13, 2011

எலிக்கூட்டம்




முன்நீட்டிய துருவல் பற்களும்
பெரிய காதுகளுமாய்
புஸுபுஸு தோலோடு
எழுநூறு எண்ணூறு
புகைப்படங்களிலாவது இருப்போம்.

கால்கள் மீதேறி
கட்டி அணைக்கும் குழந்தைகளோடு
தொற்றியபடி
கட்கத்தில் இடுக்கிய பையுமாய்
கூடவே நீங்களும் இருப்பீர்கள்.

சிவப்பு சட்டமிட்டிருந்த
சுவர்ப்படமென்றால்
அது சிங்காரம்தான்.

செப்டம்பருக்கு முந்தையது என்றால்
புன்னூஸ் படமாக இருக்கலாம்.

கார்த்திகைக்குப் பிறகு
நாங்கள் குள்ளக்கரடி கூட்டத்திற்கு
மாறிவிடுவோம்.

ஏதோ ஒரு புகைப்படத்தில்
கையுறை இல்லாது
கன்னம் கொஞ்சும் கை
நிச்சயம்
நாங்கள் இல்லை.




அ-நிச்சயம்
==============

உருண்டு பிரியும்
சக்கரங்களுக்கிடையே
அநிச்சயமான பின்னலில்
அதிர்ஷ்ட எண்
ஏதாவது
நழுவி விழும்.

கட்டங்களுக்கு மேலே
சீட்டுகளை புரட்டக்
காத்திருக்கும் கைகளில்
கையுறை அணிந்த கை
ஒன்று மட்டும் நிச்சயமாய்.


ஸ்ருதித்தல்
============

முறுக்கேறிய தந்தியிலிருந்து
வெடித்து கிளம்பிய நாதமாய்
ஸ்ருதித்த உடலிலிருந்து
ஓலமிட்டேன் உன் பெயரை.
நீ கேட்டாயோ?
யார் கேட்டரோ?



ஜகன்னாதம்
============

ஆடும் தட்டுகளுக்கிடையே
முனைவும் முள்
நிறுத்திடச் சொன்னால்,
உங்கள் எடைகளுக்கான இலக்கத்தை
சரியாக
சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அது போதும்!
நான் ஆடிக் கொண்டே
இருக்கிறேன்.

3 மறுமொழிகள்:

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ஸ்ரீதர் நாராயணன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி :)

ஸ்ரீதர் நாராயணன் said...

இந்த இடுகையைப் பற்றிய கூகுள் Buzz விவாதம் படிக்க இங்கே சொடுக்கவும்.