September 14, 2011

கேளிக்கைப் பேச்சு

இப்பொழுது டோஸ்ட்மாஸ்டர்ஸ் அமைப்பில் இரண்டாவது சுற்றில் பேசிக் கொண்டிருக்கிறேன். Advanced Communicator Bronze என்று அதற்குப் பெயர். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் சிவப்பு கட்டம் போட்ட இடம்தான் அது. அந்த சார்ட்டில் இருக்கும் அத்தனை நிலைகளையும் தாண்டினால் Distinguished ToastMaster என்ற பட்டமாம். தற்போதைய வெண்கலத்தில் இரண்டு பிராஜெக்டுகளாக பத்து பேச்சுகள் உண்டு. முதல் நிலையில் Entertainment Speaker (கேளிக்கை பேச்சாளர்) என்று ஐந்து பேச்சுகள் முடித்து அரைக்கிணறு தாண்டியாகிவிட்டது. அடுத்த நிலைக்கு 'கதை சொல்லி' தேர்ந்தெடுத்திருக்கிறேன்.



கெக்கரேபிக்கரே என்று எது செய்தாலும் அதை கேளிக்கை லிஸ்ட்டில் காட்டிவிடலாம் என்பதால்தான் அதைத் துணிந்து தேர்ந்தெடுத்தேன். பிப்ரவரியில் இருந்து ஆகஸ்ட்வரை ஆறு மாதங்கள் ஆகிற்று முடிக்க.

கேளிக்கைப் பேச்சு

'எனது அதிர்ஷ்ட தேவதை ஒரு நரிக்கொம்பு' என்று ரவுசு விட்டு ஆரம்பித்த பேச்சு இது. நரிக்கொம்பைக் கையில் பிடித்துக் கொண்டு என்ன நினைத்தாலும் அப்படியே நடக்கும் என்று அறிமுகப்படுத்தி, 'இதோ இதுதான் அந்த நரிக்கொம்பு' என்று பார்வையாளர்களிடையே சுற்றுக்கு விட்டேன். இதோ என் தாத்தாதான் இந்த நரிக்கொம்பை முதலில் பெற்று வந்தார் என்று என் புகைப்படத்தையே காட்டினேன். சின்ன வயசில் என் தாத்தா என்னைப் போல்தான் இருந்தாராம் என்று சொல்ல செம சிரிப்பு. அதான் சொன்னேனே கெக்கரேபிக்கரே என்று எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று.

நரிக்கொம்பின் அருமை பெருமைகளை (உதவி- விக்கிபீடியா) சொல்லிவிட்டு, இறுதியாக பார்வையாளர்களிடையே 'நினைப்பதையெல்லாம் நடத்தி காட்டும் நரிக்கொம்பை நீங்கள் கையில் வைத்திருந்தீர்களே... எதுவும் நினைத்து பார்த்து டெஸ்ட் செய்தீர்களா?' என்று கேட்டேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் நினைத்தது நடக்காததற்கு காரணம் அது போலி, இதுதான் ஒரிஜினல் என்று இன்னொரு நரிக்கொம்பை காட்டினேன். இதோ டெமோ செய்து காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு 'இந்த அறையில் இருக்கும் போலி நரிக்கொம்பை மறையச் செய்துவிடு' என்று சொல்ல அந்த போலி நரிக்கொம்பு காணாமல் போய்விட்டது. முன்னமே கேட்டுக்கொண்டிருந்தபடி பார்வையாளர்களில் ஒருவர் அதை எடுத்து மறைத்து விட்டிருந்தார். நினைத்த அளவுக்கு டிரமாட்டிக்காக செய்ய முடியாவிட்டாலும் ஏதோ புதியதாக முயற்சி செய்த நிறைவு. ஃபீட்பேக் கொடுத்த அம்மணி பக்கம் பக்கமாக பாராட்டினார்.

கேளிக்கை பேச்சுக்கான தேவைகள்

படம், பாட்டு என்றெல்லாம் சேர்த்து பேசினால் கேட்பவர்கள் மனதில் தங்கும் என்பதுதான் இந்த பிராஜெக்ட்டின் அடிப்படை. 'என்னைக் கெடுத்த கல்வி' என்ற தலைப்பில் ஒரு பவர்பாய்ண்ட் செய்துகொண்டு பேசினேன். எனது படிப்பு எனக்கு ஒன்றுமே செய்யவில்லை. ஃபேஸ்புக்கில் நண்பர்கள் பெற்றுத்தரவில்லை, 140 எழுத்துகளில் ட்வீட்ட சொல்லித்தரவில்லை, ப்ளாக் ட்ராஃபிக் கூட்ட சொல்லித்தரவில்லை என்று ஜாலியாக போட்டு தாக்கினேன். வரலாற்றை திருத்தி எழுத முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால் வரலாற்று பரீட்சையில் எழுதுவதையெல்லாம் திருத்துகிறார்கள் என்று கார்க்கி ஸ்டைல் காமெடிகள் சிலதும் சேர்த்திருந்தேன். இந்த தோல்விக்கு ஒரே பரிகாரம் நான் படித்த பள்ளிக்கு சென்று கட்டிய பணத்தையெல்லாம் ரீஃபண்ட் கேட்கப் போகிறேன் என்று சொல்லி முடித்தேன். FRIGYES KARINTHY என்ற ஹங்கேரியர் எழுதிய நாடகத்தை (எப்போதோ பள்ளியில் படித்தது) முன்வைத்து அமைத்துக் கொண்ட கதை. நல்ல ரெஸ்பான்ஸ். பேச்சை Evaluate செய்தவர் முடிவு பிரமாதம் என்று பாராட்டினார்.

வேடிக்கை பேச்சு

சிரிப்புதான் கேளிக்கை பேச்சிற்கான முக்கிய தேவை. சொந்த அனுபவத்திலிருந்து ஏதாவது சொல்லி சிரிக்க வை என்று கைட்லைன் கொடுத்திருந்தார்கள். 'Being Indian' என்ற தலைப்பில் ஆறு நிமிடம் பேசினேன். பொதுவான Standup Comedyகளில் தாழ்த்தி பேசுவது போல் இல்லாமல் சற்று Genuine அனுபவங்களாக சொல்லிக் கொண்டு போனேன். தொடங்கும்போதே முன்னெச்சரிக்கையாக ஒரு ஜோக் சொல்லி நான் கையை உயர்த்திக் காட்டும்போது சிரித்துவிடுங்கள். அதுதான் உங்களுக்கான க்யூ என்று சொல்லி வைத்துக் கொண்டேன். ஜாலியாகப் போனது. எல்லாரும் நன்றாகவே சொல்லிக்கொடுத்தபடி சிரித்தார்கள்.

உணர்ச்சிகரமான பேச்சு

திடீர் திடீர் திருப்பங்களுடன் ஒரு த்ரில்லர் ஸ்டோரியை எடுத்துக் கொண்டேன். 'அங்கிள் சார்லியை கொன்றது யார்?' என்பதுதான் தலைப்பு. சொல்லும்போது கொஞ்சம் நீண்டு நீர்த்துப் போய்விட்டது. இன்னும் கொஞ்சம் டிராமா சேர்த்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. நல்லவேளை. யாரும் எழுந்து 'நான் கொல்லலயே' என்று காமெடி செய்யவில்லை.

டின்னர் பேச்சு

டின்னருக்கு அப்புறம் கலந்துரையாடலில் பேசுவது போல் இயல்பான பேச்சு என்று பிராஜெக்ட். ஆடியன்ஸிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அவருடைய டின்னருக்கான நன்றி என்று சொல்லிவிட்டு அப்படியே கேஷுவலாக வேறு வேறு தலைப்புகளில் பேச்சைக் கொண்டு சென்றேன்.

'பிரமாதமான டின்னர். மிகவும் ரசித்தேன். ஆனால் என்ன... நீங்கள் பரிமாறிய சாலட் அளவுக்கு இந்த வைன் பழசாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உருளைக்கிழங்கு கருகிய அளவுக்கு ஸ்டீக் வெந்திருக்கலாம். இந்த அறையின் வெப்பம் அளவுக்காவது உங்கள் காப்பி சூடாக இருந்திருக்கலாம்' என்று கலாய்த்துவிட்டு, அப்படியே மாமாவின் திருமண தினம், குழந்தையின் புகைப்படத்தை பாராட்டிய நண்பர் என்று சில ஜோக்குகளை சேர்த்து பேசினேன். எல்லாம் மெயிலிலும் இணையத்திலும் கண்டறிந்ததுதான். பாராட்டிய பேசியவர் 'ஆறு மாதமாக இந்த பிராஜெக்ட்டை எப்படி செய்வது என்று திணறிக் கொண்டிருந்தேன்' என்று சொல்ல்லிப் பாராட்டினார். இவனே செய்துவிட்டானே நாம் செய்ய முடியாதா என்று சுய ஊக்குவிப்பு செய்து கொண்டிருப்பார் போல.

2 மறுமொழிகள்:

பொன்ஸ்~~Poorna said...

Can you publish your "being indian".. I guess it would be great to listen or read..

infact, you can do some audio blogs with these toast masters.. may be 3-4 of us can get together and start some virtual toast masters among us? how about that ?

ஸ்ரீதர் நாராயணன் said...

அந்த ஸ்க்ரிப்ட் முழுவதுமாக இல்லை பொன்ஸ்.

நான் 2001ல் வந்தபோது மிட்-வெஸ்ட் பக்கமாக இண்டியானா மாநிலத்து சின்ன ஊரில்தான் வேலை பார்த்தேன். சான் ஹோஸேவிலிருந்து சிகாகோ, சிகாகோவிலிருந்து சின்ன டகோட ப்ளேனில் சவுத் பெண்ட் போனோம். அப்பொழுது சந்தித்த ஒரு வயதான அம்மணி படித்துக் கொண்டிருந்த புத்தகமும் நான் கையில் வைத்திருந்த புத்தகமும் ஒன்றாக இருந்தது. உடனே அவர் உற்சாகமாக பேச ஆரம்பித்தார். அவருக்கு இந்தியா பற்றி எதுவுமே தெரியவில்லை. செயிண்ட் லூயிஸ் தாண்டி என்ன இருக்கிறது என்ற நினைப்பில் இருந்திருப்பார் போல....

அங்கே வேலை பார்த்த பிராஜெக்ட்டில் 5 மராத்தியர் மற்றும் நான் ஒருவன் மட்டும் அ-மராத்தியன். சமயத்தில் டீம் மீட்டிங்கில் கூட மராத்தியில் பேசுவார்கள். கிளையண்ட் கிண்டலாக 'என்னைப் பற்றி திட்டுகிறீர்களா?' என்றுக் கேட்பார். நான் 'உங்களைப் பற்றி மட்டுமல்ல... என்னையும் பற்றிதான் திட்டுகிறார்கள்' என்பேன்.

இப்படியாக சில சொந்த அனுபவங்களை வைத்து இந்தியனாக இருப்பதில் நேர்ந்த சில சிக்கல்களை வேடிக்கையாக சொல்லியிருந்தேன்.

// virtual toast masters // நல்ல ஐடியாதான். ஆனால் இதன் நடைமுறை சாத்தியங்களை பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. நான் ஒரு பெரிய சோம்பேறி ஆயிற்றே :))