இப்படி இரண்டு முறை சொல்லிவிட்டு போய் விடுகிறார் அறிவிப்பாளர். சுற்றி இருக்கும் இருபது சொச்சம் மக்களும் கைதட்ட, நீங்கள் கடகடவென உங்கள் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இன்ஸ்டன்ட்டாக 2 சொச்ச நிமிடங்களுக்கு எதையாவது பேச வேண்டும். இப்படி ஒரு பேச்சுப் போட்டி.
முதலில் வந்தவர் கொஞ்சம் வயதான் தோற்றத்தில் தீவிரமான அரசியல் பார்வை உள்ளவர் போல் தெரிந்தார்.
"நான் கீழே விழுந்ததும் சுற்றி யாருமே இல்லை... என்னை ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அது ஒரு டீவி ஷோ என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் நான் செய்வதை, பேசுவதை யாரும் கேட்கிறார்களா என்று உரத்துக் கேட்டேன்... பதிலே சொல்லவில்லை..."
என்று படபடவென பட்டாசு வெடித்துக் கொண்டே போனார். டைம் பார்த்து சொல்ல வேண்டிய அம்மணி அசால்ட்டாக இருந்ததால் மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆகியும் சிக்னல் எதுவும் கொடுக்கவில்லை. அவரும் விடாமல் என்னவெல்லாமோ ஆக்ஷன் கோமாளித்தனங்கள் எல்லாம் செய்து விட்டு 'நான் சொல்வது கேட்கிறதா... கேட்கிறதா' என்று நான்கைந்து வாட்டி கூவிய பிறகு சுதாரித்துக் கொண்டு 'டைம் முடிந்தது' என சிக்னல் கொடுத்தார்கள். பெரிசுகள் எல்லாம் அவ்வப்போது சிரித்துக் கொண்டதைப் பார்த்தால் நிறைய அரசியல் 'பொடி' வைத்து பேசியிருந்தார் போலும்.
அடுத்து வந்தவர் மடமடவென பேச ஆரம்பித்தாலும், நடுநடுவே திக்கியது. சிறுவயதில் பக்கவாதம் போல் ஏதோ நோய் தாக்கியதில் பேசும் சக்தியை இழந்தவர், பின்னர் விடா முயற்சியால் தனது பேச்சுதிறனை மீட்டெடுத்திருக்கிறாராம்.
"நான் போய் விழுந்த இடம் சுற்றிலும் பச்சைப் புற்கள். அங்கே பார்த்தால் பெரிய பெரிய மிருகங்களாக இருந்தன. நானோ சின்னஞ்சிறு எலி. பக்கத்தில் பெரிய ராட்சச டைனோசர். அது கண்ணில் நான் படவேயில்லை. ஆனால் நான் அதோடு சண்டை போட நினைத்தேன். அப்பொழுது அங்கே ஒரு மூலிகை இருந்தது. அதை தொட்டவுடன் நான் பெரிய உருவமாக வளர்ந்துவிட்டேன். இப்பொழுது நான் எலி இல்லை. பெரிய உருவம்... பெரிய எலி என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்த டி-ரெக்ஸை ஓட ஓட விரட்டினேன்"
என்று ஃபேண்டஸியாக பேசிக் கொண்டே போனார். வேகமாக பேசிக் கொண்டே வரும்போது நாக்கு குழறிவிடும். அதை வெகு திறமையாக சமாளித்து பிரமாதமாக பேசினார்.
அடுத்து வந்தவர் தடதடவென ராப் பாடலாக பாட ஆரம்பித்து விட்டார்.
"நானோ சிறு கோழிக் குஞ்சு, அதுவோ பிரும்மாண்டமான பறவை. நான் சாப்பிடுவது குருத்து (shoots) அவன் செய்வது அலறுவது (hoots)" என்று மூச்சுவிடாமல் ஃப்ளோவாக பாடிக் கொண்டே போனார். ஸ்டாண்ட்-அப் காமெடியில் இம்மாதிரி உடனடி பாடல்கள் பாடி அசத்துவார்கள். அது போல் பிரமாதப் படுத்தினார்.
அடுத்து வந்தவர் கொஞ்சம் விஷுவலைஸேஷனோடு ஆரம்பித்தார்.
"ஆஹ்... நான் ஒரு சிறு பிராணி. என்ன பிராணி நான்... சின்ன அணில்... அணிற்பிள்ளை. இப்படி அப்படி ஓடுவதுதான் என் வேலை. நான் சென்ற பிறகு நான் சென்ற தடத்தைப் பார்த்து வியப்பீர்கள் நீங்கள்... திடீரென்று நான் பூமியில் இல்லை. யாரோ என்னை தூக்குகிறார்கள்" தலையை நிமிர்ந்து பார்த்து விட்டு " யாரென்றே தெரியவில்லை. காற்றில் மூச்சு விட முடியவில்லை. திணறலோடு கீழே விழுகிறேன். ஆஹ்.. இது என்ன... இவ்வளவு அருமையாக இருக்கிறது. இதுதான் அணிற்பிள்ளைகளின் சொர்க்கமா? ஐயா... போட்டி நடத்துபவரே... என்னை சொர்க்கத்தில் விட்டதற்கு மிக்க நன்றி ஐயா"
என்று முடித்தார். இவருடைய பலம் Vocabulary. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் மிக அழகாக பேசினார். இரண்டு நிமிடங்களில் அவர் பேச்சு எப்படி எப்படியெல்லாமோ உருமாறியது என்பது அழகாக இருந்தது. முடிவில் ஒரு சின்ன கவித்துவம்.
அடுத்து வந்த அம்மணி வந்தவுடன் சின்ன ஜந்து போல தரையில் அங்கங்கே உட்கார்ந்து காண்பித்தார். அதற்குள் மனதிற்குள் ஒரு சீனை உருவாக்கிக் கொண்டுவிட்டார்ப் போலும்.
"நான் சுதந்திரமாக இந்த இடத்தில் என் குடும்பம் மற்றும் தோழர்களோடு இருக்கிறேன். நீந்துகிறேன். நான் ஒரு மீன். ஆனால்... அய்யய்யோ என்னை இவன் தூக்கிக் கொண்டு செல்கிறானே.. அய்யோ... எங்கே கொண்டு போகிறான். நல்லவேளை நான் மீனாக இருக்கிறேன்... அவன் நகங்களில் இருந்து வழுக்கி வழுக்கி கீழே விழுந்துவிட்டேன். இதோ என் வாழ்விடத்திற்கு அருகேதான் விழுந்திருக்கிறேன். என் நண்பர்களுடன் திரும்பவும் நீந்தி விளையாட ஆரம்பித்து விட்டேன். இனி கழுகு கண்களில் மாட்டாமல் ஜாக்கிரதையாக நீரின் ஆழத்தில் விளையாட வேண்டும்"
என்று 'எல்லாமே சுபம்' என்ற வகையில் பேசி முடித்துவிட்டார். பேச்சோடு பேச்சாக அவர் உடல்மொழியையும் திறம்பட வெளிப்படுத்தினார்.
ராப் பாடியவருக்கும், மீடியாக்களோடு கத்தி கத்தி போராடியவருக்கும் பரிசு கிடைத்தது.
இந்த ஈவெண்ட்டில் இன்னொரு பேச்சுப் போட்டியும் நடந்தது. ஹ்யூமரெஸ் பேச்சு போட்டி. ஏழு நிமிடங்களுக்கு 'தயார்படுத்தி'க் கொண்டு வந்த பேச்சை பேச வேண்டும். அந்தப் போட்டியில் நானும் பங்கெடுத்துக் கொண்டு மூன்றாவது பரிசு பெற்றேன். 'ஏன்யா மூணாவது பரிசு' என்று சண்டைக்குப் போனால், 'நாலு பேர் கலந்துகிட்டாத்தான் நாலாவது பரிசு கொடுக்க முடியும்' என்று பதில் சொல்லிவிட்டார்கள். லாஜிக் கரெக்ட்தானே என்று நானும் விட்.....ட்டுட்டேன்.
1 மறுமொழிகள்:
Last line 3rd prize twist was super...:) நான் கூட இந்த மாதிரி 'ஆறுதல் பரிசுகள்' நிறைய வாங்கி இருக்கேன்...:)))
Post a Comment