அதிநாயக படங்கள் என்றால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது கிறிஸ்டஃபர் ரீவ் ( Christopher Reeve) நடித்த 'சூப்பர் மேன்'தான். பேட்மேன், அயர்ன் மேன், ஃபன்டாஸ்டிக் ஃபோர் போன்ற பல அதிநாயகர்களும் இந்த பிரபஞ்சத்தை தீய சக்திகளிடமிருந்து அயராது பாதுகாத்துக் கொண்டிருக்க, இந்திய அதிநாயகனாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறது G.One. 'ஜீவனை' சற்றே ஸ்டைலிஷாக சுருக்கி பெயரிட்டிருக்கிறார்கள். Good One என்றும் சொல்லலாமாம்.

நம்ம சிட்டி ரோபோ போல ரெண்டு யூனிட் எலக்ட்ரிசிட்டி உண்டு, நொடிகளில் புத்தகங்களை உள்வாங்கி, கழுத்தை முழு வட்டமாக சுற்றிக்காட்டும் எளிமையான ரோபோ இல்லை. நீல மின்சாரத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ கேம் சூப்பர் ஹீரோ. நீலக் கண்களோடு, ரேடியேஷன் ப்ரொஜெக்டர், பவர் பெல்ட், ரிசனன்ஸ் ட்ரான்ஸ்மிட்டர் என்று ஏகத்துக்கு டெக்னிகல் ஆழத்தோடு வடிவமைத்திருக்கிறார்கள். என்ன செய்வார் இந்த G.One? பவர் ஷூக்களினால் அப்படியே பறக்க முடியும்... அந்தரத்தில் நிற்க முடியும்... ஆக்டிவ் மேட்ரிக் ஃபோர்ஸினால் அதிரடியாக சண்டை போட முடியும்... உலகின் எந்த மூலைக்கும் வழி கண்டுபிடிக்க முடியும்... கண்ணிமைப்பதற்குள் பறந்து விடுவார்... அதாவது அந்தர்தியானமாகி விடுவார்... எதிர்காலத்தை உணர்ந்து சொல்ல முடியும்... இப்படி எத்தனையோ சக்திகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக இதயம் உண்டு (HART Hertz Advanced Resonance Transmitter). அதனால்தான் அது Good One (G.One) ஆக அறியப்படுகிறது.
ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல எதிரியாக ராவணன் உருவெடுக்கிறான், Ra.One (Random Access One) என்பதின் சுருக்கமாம். இன்னொரு கோணமாக 'ராவண்'னின் உச்சரிப்பையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஜீவனை விட ராவண் எந்த வகையில் மாறுபட்டிருக்கிறான் என்ற விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.
ராவண்ணும், ஜீவன்னும் வீடியோ கேம்களிலிருந்து Cyber Punk ஸ்டைலில் நிகழ் உலகிற்கு வந்துவிடுகிறார்கள் போல. இந்த வீடியோ கேம்கள் உருவாக்கும் நிபுணர், ஷேகர் சுப்ரமணியனாக (ஆம். தமிழ் பாத்திரம்தான்) ஷாருக் கான் நடிக்க, (அவரேதான் ஜீவனும்) அவருடைய திறமையை தவறான பாதையில் உபயோகிக்க திட்டம் போடும் ராவணனாக அர்ஜுன் ராம்பால். தமிழ் சுப்ரமணியத்திற்கு பஞ்சாபி மனைவியாக சோனியா பாத்திரத்தில் கரீனா கபூர்.
ஒரு nerdy geeky dorky-ஆக இருக்கும் ஷேகருக்கு தன் மகனை கவர முடியவில்லை. சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறி அவனை கவர திட்டம் போடுகிறார். அதன் விளைவாக என்னவெல்லாம் நடக்கிறது என்பதே கதை என்று இணையத்தில் பல தளங்களின் மூலம் அறிய முடிகிறது.
ஷாருக்கானை துடிப்பான இளைஞனாக Fauji, சர்க்கஸ் போன்ற டிவித் தொடர்களில் பார்த்த போது மிகவும் பிடித்திருந்தது. ஆனால் சினிமாவில் அவரிடமிருந்த நடிகர் மறைந்து போய் பெரிய ஸ்டாராக மட்டுமே எஞ்சியிருக்கிறார். இன்றும் ஆமீர்கானை புதுசாக திரையில் பார்க்க முடிகிறது. ஷாருக் சற்று சலிப்படையத்தான் வைக்கிறார். அவருடைய டிவி பேட்டிகளில், விழாக்களில், கேம் ஷோக்களில் தெறிக்கும் புத்திசாலித்தனமான நகைச்சுவை மிகவும் பிடிக்கும்.
கிட்டத்தட்ட 4 வருடங்களாக ரா.ஒன்னை திரைக்கு கொண்டு வர அயராது பாடுபடுகிறார். மெலிந்து போய், வயது கூடிப் போன உருவத்தோடு அவர் டீவியில் வரும்போது 'இந்த தோற்றத்தை சரிசெய்ய எவ்வளவு நாள் கிராஃபிக்ஸ் செய்யனுமோ' என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. கூடவே வீடியோ கேம்கள், ப்ரமோக்கள் என்று பல முனைகளிலிருந்தும் இந்தப் படத்தை பிரும்மாண்டமாக கட்டி எழுப்புகிறார்கள். ஹீரோவின் தமிழ் பின்புலம், தமிழ் டப்பிங், ரஜினியின் தோற்றம் என்று தமிழ் ஆடியன்ஸுக்கு நெருக்கமானதாக இருக்கும் என நினைக்கிறேன். படத்தைப் பற்றி பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
இந்த தமிழ் / பஞ்சாபி திருமணக் தம்பதி இந்தி சினிமாவின் எவர்க்ரீன் காமெடிகளில் ஒன்று. அதிலும் தமிழ் என்றால் 'அய்யோ...' (நன்றி: மெஹ்மூத்) எனக் கூவிக் கொண்டு ஒரு ஐயர் பையன் / பொண்ணைக் காட்டுவார்கள். அபர்ணாசென் படங்களில் தவறாது ஒரு தமிழ் பாத்திரம் வந்து விடும். இந்தப் படத்திலாவது விதிவிலக்காக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி இருக்காது என்று உள்ளுணர்வு சொல்கிறது.
போஸ்டர், மற்றும் ட்ரெய்லர்களின் இன்ஸ்பிரேஷன் பற்றி இப்பொழுதே ஆங்காங்கே துப்பறிந்து எழுதிவிட்டார்கள். அதிலும் 'தில்தாரா' பாடலில் வரும் ஒரு சீக்வென்ஸ் அப்படியே ஒரு ஜெர்மானிய விளம்பரத்திலிருந்து (அர்ஜெண்டைன் ஃபவுண்டேஷன் ஆஃப் த ஹியரிங் இம்பேர்ட்) சுட்டதாம்.
படம் வெளிவருதற்குள் இன்னும் என்னவெல்லாம் 'உருவல்'களை கண்டுபிடிக்கப் போகிறார்களோ.
நோலனுக்கு சவால் விடும் அளவுக்கு அதிநாயகப் படமாக வராவிட்டாலும், சராசரிக்கு மேலான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்று குறித்து வைத்திருக்கிறேன்
2 மறுமொழிகள்:
But why that youtube link? Bulb for me!
விஜயஷங்கர்ஜி,
ரா.ஒன் திரைப்படத்தில் வரும் 'தில்தாரா' பாடலில் ஒரு சின்ன காட்சி வரும். கரீனா கபூர் (சோனியா) பிரசவிக்கும்போது ஷாருக்கான் (சேகர்) பக்கத்தில் உதவிக்கு இருப்பார். குழந்தை பிறந்தவுடன் மருத்துவர் அதை திருப்பி முதுகில் அடிக்க (அதை அழ வைக்க) அதை பார்க்கும் ஷாருக் பாய்ந்து சென்று மருத்துவரை அடித்து உதைப்பார். கரீனா கபூர் ஆயாசத்துடன் சரிந்து கொள்வார். இந்தப் பாடல் காட்சி யூட்யூபில் தேடுவது சுலபம் என்பதால் இடுகையில் இடவில்லை.
மேலே இட்டிருக்கும் வீடியோவில் காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான விளம்பரத்தில், கணவன் மனைவியின் பிரசவத்தில் ஒத்தாசையாக இருக்கிறான். குழந்தை அழவில்லை என்பதால் மருத்துவர்கள் அதை அடித்து அழ வைக்க, காது கேளாத கணவன் அது புரியாமல் மருத்துவரை வெளுத்துக் கட்டுகிறான்.
ரா.ஒன் படத்தில் சேகருக்கு தன் மகன் மேல் இருக்கும் அதீத பாசத்தை சுட்டிக் காட்ட இதே சீக்வென்ஸை உபயோகித்திருக்கிறார்கள் பாருங்கள். :)
Post a Comment