
இந்த அமானுஷ்யமான கதையைப் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் உங்களுக்கு அந்தக் குரல் கேட்கிறது. பிரசவ வேதனையோடு முனகும் பூனைக் குட்டிப் போல யாரோ விடாமல் அனத்திக் கொண்டிருக்கிறார்கள். சுவர்க்கோழியின் ரீங்காரம் போல விட்டு விட்டு ஒலிக்க, என்னவென்று உற்றுக் கேட்கிறீர்கள்.
ஏதேதோ தொடர்பில்லாமல் கேட்கிறது. 'செங்கண சாற்றின் சிறு கரையில்... பதிமூன்றாம் பிறையின் மூன்றாம் ஜாமத்தில்.... எட்டு யோசனை ஆழத்தில் ஏழடுக்கு செல்வம் ஊற்றெடுக்க....'
சுற்றுமுற்றும் பார்க்கிறீர்கள். எதுவும் புலப்படவில்லை. ஆனால் குரல் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அப்பொழுதுதான் கவனிக்கிறீர்கள். வடக்கு மூலையில் எதுவும் இல்லாத இடத்தில் அது இருக்கிறது. வடிவமில்லாத வடிவோடு, அரவமில்லாத குரலோடு, இல்லாது இருக்கும் பருப்பொருளாக, ஒலித்துக் கொண்டு இருக்கிறது அந்த அசரீரி. ஏதோ பெருஞ்செல்வத்திற்கு வழித்தடம் போல நீளமாக சொல்லிக் கொண்டிருக்கிறது.
கொஞ்ச நேரம் மௌனம். மீண்டும் பூனையின் முனகல். 'கங்ஙா... முங்ஙா...'. இப்பொழுது உங்களுக்கு ஓரளவுக்கு அதன் மொழி பழகி விட்டதால் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஏதோ இடிந்த கோவிலைப் பற்றிய குறிப்புப் போல இருக்கிறது. சாபம் பெற்ற வசுக்கள் பரிகாரத்திற்காக பூமியில் பிறந்த தலமாம். பின்னோடும் அருவி, மண் அகற்றிய மலையின் பெருமையை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கதையில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாதபடிக்கு அந்தக் குரல் உங்களைச் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. காதுகளை மூடினாலும் உங்கள் உள்ளேயே உட்கார்ந்து கொண்டு 'கியாங்..கியாங்....' என்று அரற்றிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு ஒரு சம்சயம் உண்டாகிறது. இந்த அசரீரி சொல்வதில் ஏதாவது உண்மை இருக்குமா? இது என்ன திடீரென புதுச் சிக்கல்? பொறுக்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறதே.
இப்பொழுது அசரீரியின் குரலில் ஒரு சின்ன தடுமாற்றம். அதன் தாளகதி சற்றே மாற வேறு ஏதோ சொல்கிறது.
"அசரீரியின் வாக்கு பொய்க்கவா போகிறது? ஏன் இவ்வளவு யோசனை உனக்கு? இதெல்லாம் எவ்வளவு அரிய குறிப்புகள் தெரியுமா? இதற்கேன் இவ்வளவு குழப்பம்?"
ஆம். அசரீரி உங்களோடுதான் உரையாடுகிறது. ஆச்சரியத்தோடு நீங்கள் கேட்கிறீர்கள்...
"இதெல்லாம் என்ன? அதிர்ஷ்ட குறிப்புகளா? எனக்களிக்கப்படும் வரமா? இல்லை பித்து பிடித்த நிலையில் எனக்கு கேட்கும் பொய்க்குரலா?"
அசரீரி மெலிதாக சிரிக்கிறது. எல்லாம் அதே 'கங்கா முங்கா' பிரசவ வேதனைப் பூனைதான். ஆனால் உங்களுக்கு அதன் மொழி நன்றாகவே பிடித்தமாகிவிடுவதால் சிரிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
"எல்லாம் ஒன்றுதானே. உனக்கு கேட்கிறது என்று நீ நம்பும் வரையில் எல்லாம் உண்மைதான். சந்தோஷமா? அசரீரி சொல்கிறது என்றால் எல்லாரும் அப்படியே நம்பிவிடுவார்கள். நீதான்..."
அது உண்மைதான். அசரீரியின் குறிப்புகள் எல்லாம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவைதானே என்று யோசிக்கிறீர்கள். உங்கள் மனதைப் படித்துவிட்டது போல அது சொல்கிறது.
"அதேதான். உன்னைப் போல ஒரு சந்தேகப் பிராணியை இத்தனை காலமாய் நான் பார்த்ததே இல்லை"
"எத்தனை காலமாய்?" என்றுக் கேட்கிறீர்கள்.
"தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்? இரு நொடிகளுக்கு இடையே எவ்வளவு காலம் இருக்கிறது என்று தெரியுமா உனக்கு? அந்தக் கணக்கு எல்லாம் உனக்குப் புரியாது. என் கூற்றின் மேல் என்ன சந்தேகம் உனக்கு?"
"அப்படி இல்லை. முன்னே பின்னே இப்படியெல்லாம் நடந்து பழக்கமில்லை. அதிர்ஷ்டத்தை எப்போதுமே நம்புபவன் இல்லை நான்" என்கிறீர்கள். எத்தனை முறை லாட்டரி டிக்கெட் வாங்கி பம்பர் பரிசு அடித்திருக்கிறதாம் அந்த அதிர்ஷ்டத்தை நம்பி வைப்பதற்கு?
அசரீரி இப்பொழுது குதூகலத்தோடு,
"அதிர்ஷ்டத்தையெல்லாம் நாம் நம்பக் கூடாது. அந்த அதிர்ஷ்டம்தான் நம்மை நம்ப வேண்டும். அந்த வேளை உனக்கு வாய்த்திருக்கிறது இப்பொழுது." என்கிறது.
இதில் ஏதும் உட்-சிக்கல் இருக்குமோ என்று யோசிக்கிறீர்கள். எத்தனை நீதி கதைகள் படித்திருக்கிறீர்கள். 'தொட்டதெல்லாம் பொன்னாகும்' வரம்பெற்ற மிதாஸ் கதி என்னவாயிற்று? தால்ஸ்தாயின் பாக்கோமிற்கு கிடைத்தது ஆறடி நிலம்தானே? அழியாத செல்வத்திற்கு ஆசைப்பட்டு வைக்கோல் செருப்பாக புனைந்து கொண்டிருந்த விவசாயி, மந்திர செருப்பைத் தேடிப் போன சித்திரக் குள்ளன், கூந்தலெங்கும் நட்சத்திரங்களை சூடிக் கொண்டு சூரியனுக்காக காத்திருந்த இளவரசி என்று பலரின் கதையும் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது.
அசரீரி மீண்டும் சொல்கிறது
"அதெல்லாம் பேராசைப் படக்கூடாது என்பதற்காக சொல்லப்படும் நீதிக் கதைகள்தானே."
சிறிது இடைவெளி விட்டு இன்னமும் அழுத்தமாக சொல்கிறது
"சாதிக்க முடியாதவர்கள்தானே நீதியைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டும். நீ சாதித்தால் உன் சாதனைகள்தான் புதிய நீதிகளாக அறியப்படும். புரிகிறதா? அன்று பாக்கோம் அத்தனை நிலத்துக்கும் ஆசைப்பட்டதால்தானே இன்று உலகம் முழுவதும் அவனுடைய இடமாக இருக்கிறது."
ஆனால் எதற்கும் ஒரு விலை இருக்கத்தானே செய்கிறது. இந்த அசரீரியின் வாக்குக்கு என்ன விலையோ என்று சந்தேகம் வருகிறது உங்களுக்கு.
"இதுவரை நீ வாழ்ந்த வாழ்க்கையின் விலை என்ன? இது போல் இன்னொரு அரைப்பங்கோ, ஒருபங்கோ, இருபங்கோ வாழப் போகும் வாழ்க்கைக்கு என்ன விலை? அதே நிச்சயமில்லாத தேடலும், அலைக்கழிப்பும்தானே. இது அதிர்ஷ்ட மழை பொழியும் தருணம். கேள்! யாளிகளும், மாகாளிகளும் புழங்கிய மலைப் பிரதேசத்தைப் பற்றிச் சொல்கிறேன். பல்லாயிரக் கணக்கான வருடங்களாக மக்கி மண்ணாகிப் போன அவர்களின் உடல்கள் எல்லாம் பெரும் செல்வமாக ஊற்றெடுத்து பொங்கிக் கொண்டிருக்க, வீர்யமான சக்தியின்..."
"இரு, இரு, நீ சொல்வதைப் பார்த்தால் ஏதோ எண்ணெய் படுகை போல் இருக்கிறது. ஒற்றை ஆளாய் நான் என்ன செய்ய முடியும் அதையெல்லாம். நீ ஆள் மாறி வாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறாய்" என்றுச் சொல்கிறீர்கள்.
"ஓ... " சற்று தடுமாறும் அசரீரி "அருள் மிக்க அந்தக் கோவில் பற்றி விளக்கவா? இடிந்து கிடக்கும் அதுதான் இனி உலகையே ஆளப் போகிறது. அதன் தல வரலாற்றைக் கேள்..." என்று ஆரம்பிக்கிறது.
"இரு! இரு! கோவில் விஷயங்களில் நிறைய சிக்கல் இருக்கிறது. எனக்கும் இந்த கதைசொல்லிக்கும் கூட அபிப்ராய பேதங்கள் இருக்கலாம்" என்கிறீர்கள். நியாயம்தானே.
"அப்படியென்றால், அடுத்த இறை அவதாரம் பற்றி, இறை வசனம் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன. கேட்கிறாயா? வெகு நாட்களாகிற்று அவற்றையெல்லாம் சொல்லி"
இது ஏதடா வம்பாகப் போயிற்று... எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று அனத்துகிறதே. எதையாவது கேட்டுத் தொலைந்து அது நிச்சயம் தொல்லையில் கொண்டு முடித்துவிடுமே என்று பயப்படுகிறீர்கள். புராண இதிகாசங்களில் வரம் வாங்கிய எவன் வாழ்ந்திருக்கிறான்?
அசரீரி அவசர அவசரமாக...
"அப்படியெல்லாம் இல்லை. அபாயமில்லாத வரங்கள் இருக்கின்றன. நீ இப்படி முற்றிலும் என்னை நிராகரித்தால் மற்ற அசரீரிகள் என்னை என்னவென்று நினைப்பார்கள்" என வருத்தமாக சொல்கிறது.
"உன் செயலாற்றலை நிரூபிக்க நான்தானா கிடைத்தேன்? உன் பேச்சைக் கேட்டால் என் நிம்மதி அல்லவா பாழாகும்?" நல்லது. படு உஷாராகத்தான் இருக்கிறீர்கள்.
"இப்பொழுதெல்லாம் அசரீரி வாக்குகள் யாருக்கும் கேட்பது கூட கிடையாது. அதிசயங்கள், அற்புதங்கள் எல்லாவற்றுக்கும் உங்கள் மத்தியில் மதிப்பிழந்து போய்விட்டன. பெரும்பாலும் நாங்கள் 'ததாஸ்து' என்று மட்டும் சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். வெகு காலம் கழித்து என் வாக்கை கேட்கும் ஒரு நபர் அதை புறம்தள்ளிச் சென்றால் எனக்கு என்ன மதிப்பு இருக்கிறது" என்று பொருமுகிறது.
சற்றே இரக்கம் வருகிறது உங்களுக்கு. என்னதான் ஆனாலும் அது அசரீரி இல்லையா?
"சரி. எனக்கு ஏதாவது வேண்டும் என்கிறபோது நான் கேட்கிறேன். அப்பொழுது அதை சித்திக்க செய். இப்பொழுது என்னை விட்டுவிடேன். எந்த நேரத்தில் இந்தக் கதையை படிக்கத் தொடங்கினேனோ" என்று அலுத்துக் கொள்கிறீர்கள். போயும் போயும் ஒரு அசரீரிக்காக இந்தக் கதையை குறை சொல்லியிருக்க வேண்டாம் நீங்கள்.
"நீ நினைத்துக் கொண்டாலே போதும். அது அப்படியே நடக்கும். ததாஸ்து" என்று வரம் அளிக்கிறது. அடுத்த வரியை படிக்கும் முன்னர் மீண்டும் முணுமுணுப்பு.
"இப்ப என்ன?"
"ஒன்றுமில்லை. ஏரிக்கரையோரமாக சக்ரவர்த்திகளோடு தத்துவ விசாரங்கள் எல்லாம் செய்து பிறகுதான் வரங்கள் அளிப்பது வழக்கம். அதெல்லாம் ஒரு பொற்காலம். இப்படி வலுக்கட்டாயமாக உன்னிடம் வந்து திணிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன் பார்" மீண்டும் பொருமுகிறது.
"அதற்காக உன்னோடு தத்துவ விவாதமா நான் செய்ய முடியும்? அப்படி செய்தால், இந்த கதைசொல்லியே கதையைப் பாதியில் முடித்துக் கொண்டு போய்விட மாட்டான்? இப்படி பொருமிக் கொண்டிருப்பதற்கு பதிலாக இந்த அசரீரி தொழிலை விட்டுவிட வேண்டியதுதானே" என்கிறீர்கள்.
"ஹ..." என்று சிலிர்த்துக் கொள்கிறது அசரீரி. "நானொன்றும் விருப்பமாக இதைச் செய்து கொண்டிருக்கவில்லை. எல்லாம் காரணமாகத்தான்"
"என்ன காரணமாக?"
"நானும் உன்னைப் போல நிறைய குறிக்கோள்களுடன் சுற்றிக் கொண்டிருந்தவன்தான். திசையின் இளவரசிகளை மணம் புரிய நிலவின் மீதேறி நெடும்பயணம் போய்க் கொண்டிருந்தேன் அப்பொழுது"
பழைய நினைவுகளில் விகசித்து நின்ற மனதோடு பெருமூச்செறிகிறது.
"ஆனால் எப்படியும் என் காதலில் வெற்றி பெற்றுவிடுவேன்" என்கிறது.
"அசரீரிக்கே அசரீரி வாக்கா?" என்று சிரிக்கிறீர்கள்.
"அசரீரிகள் சொல்வது அற்புதங்களையும், பெருநிகழ்வுகளையும் பற்றித்தானே. உன்னைப் பற்றியும் என்னைப் பற்றியுமா சொல்லப் போகிறேன்?" சிரித்துக் கொண்டே மேலே சொல்கிறது
"என்னுடைய காதலின் மகத்துவம் பற்றி நான் தெரிந்து கொண்டது நிலவில் இருக்கும் மேன்சூ மலையின் செவ்விலைக் காடுகளில். அடுக்கு அடுக்காக இருக்கும் சார இலைகளை எட்டுதிசையிலும் விரித்து உன் காதலைக் கொண்டவரின் முகத்தை வரைந்து செம்பூஞ்சி நதியில் நனைத்து செய்யும் சடங்கு அது. உன் காதல் குறிக்கோள் தப்பாமல் நிகழும். எனக்கும் அந்த உத்தரவாதம் கிடைத்த பிறகுதான்...."
இப்படி ஒரு உத்திரவாதம் கிடைக்குமானால் அந்த சடங்கை நிச்சயமாக செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறீர்கள்.
"ததாஸ்து" என்று ஆசீர்வதித்த அசரீரி தொடர்ந்து ".... அந்த சடங்கையெல்லாம் செய்து இந்த அசரீரி வடிவத்தை ஏற்றுக் கொண்டேன். உன்னைப் போல யாராவது விருப்பப்பட்டு இந்த சடங்குகளை முடித்து இந்த வடிவம் ஏற்றுக் கொண்டார்கள் என்றால், நான் விடுதலையாகி விடுவேன்"
தொடர்ந்து உற்சாகக் குரலில் உரக்கச் சொல்கிறது "திசையின் இளவரசிகளை மணந்து கொண்டு, எட்டு திக்கு யானைகளையும் உடமையாக்கி, துருவ நட்சத்திரத்திற்கு சென்று...." அசரீரி சொல்லிக் கொண்டே போகிறது.
இப்பொழுது நீங்கள் சொல்ல ஆரம்பிக்கிறீர்கள்.
'கங்ஙா... முங்ஙா....'
11 மறுமொழிகள்:
அசரீரி கதை வித்தியாசமாக அருமையாக உள்ளது ஸ்ரீதர்.வம்சி சிறுகதைப்போட்டிக்கா இது? அதை சரியாக குறிப்பிடுங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள்.
ஏன் சார், ஏன்?
ஒரு கதையைப் படிக்க ஆசைப்பட்டது தப்பா?
தப்பா?
தப்பா?
- ஆம் அசரீரியேதான்- எதிரொலியும் அசரீரியும் ஒன்றாகி விட்டன :(
நன்றி ஷைலஜா.
ஆம். போட்டிக்கு இதையையும் அனுப்பி வைத்திருக்கிறேன். :)
// தப்பா?
தப்பா?
- ஆம் அசரீரியேதான்- எதிரொலியும் அசரீரியும் ஒன்றாகி விட்டன
//
ஹா... அருமை :)
நன்றி நட்பாஸ்.
வாழ்த்துகள்!
நன்றி இளா! :)
சூப்பர்.
வித்தியாசமா இருக்கு ஸ்ரீ..வாழ்த்துக்கள்..
நல்லா இருக்குங்க. வாழ்த்துகள்
கதை நல்லா இருக்குங்க
கதையை படித்து பாராட்டிய 'தள' டாக்டர் விஜய்க்கும், மணிஜிக்கும், தீபக்கிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
இந்தக் கதையைப் பற்றிய விவாதங்களை இங்கே படிக்கலாம்.
Post a Comment