November 9, 2011

ஆமிர்கானும், ஜாக்கிசானும், வயதான வைனும்


ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நதியா சொல்வார் 'அந்த காலத்தில தீபாவளின்னா சினிமாதான். அப்பாக்கு கமல், அம்மாக்கு ரஜினி. முதல் நாள் முதல் ஷோ போய்விடுவோம்'. அந்த காலத்தில் மட்டும் என்ன, எந்த காலத்திலும் தீபாவளியும் திரைப்படங்களும் பிரியாதுதான் இருக்கின்றன. இந்த தீபாவளியை ஒட்டி இணையத்தில் வாழ்த்துகளை விட ஏழாம் அறிவும், வேலாயுதமும்தான் அடித்து தூள் பரத்திக் கொண்டிருந்தது. தற்சமயம் வசிக்கும் அமெரிக்க கிழக்கு கடற்கரையோரம், இவ்வருடம் அக்டோபரிலேயே பனிப்புயல் வீசியதால் மரங்கள் சரிந்து மின்சாரம், இணைய வசதி எல்லாம் பாதிக்கப்பட்டு தீபாவளியை மினியேச்சரில் கொண்டாட வேண்டியிருந்ததால் இந்த திரைப்படங்களை எல்லாம் சாய்ஸில் விட்டுவிட்டேன்.

அதுவும் போதிதர்மர் பக்கமே போக முடியாதபடிக்கு ஏகப்பட்ட பதிவுகளை படித்துத் தொலைத்துவிட்டேன். போதிதர்மர் தமிழரா, அரசகுலத்தவரா, விக்கி பக்கத்தை திருத்தினார்களா, நோக்குவர்மம், வராஹ சம்ஹிதை என்று ஏகப்பட்ட சர்ச்சைகள். ஒரு நண்பர் போகிறபோக்கில் 'பல்லவர்கள் திராவிடர்களே இல்லை. அப்புறம் எப்படிய்யா அவர் தமிழர்?' என்று ஒரு வெடிகுண்டு கேள்வியை வீசிச் சென்றார். நட்பின் நலம் கருதி நாக்கை உள்ளடக்கி நாக்குவர்மம் பழகியதுதான் மிச்சம்.

இம்முறை நெட்ஃப்ளிக்ஸ் உபயத்தில் ஆமீர்கானும், ஜாக்கிசானும் வந்து தடுத்தாட் கொண்டதில் ஏழாம் ஆயுதங்களிலிருந்து தற்காலிக விடுதலை.

Delhi Belly



முதலில் "டெல்லி பெல்லி" என்று கேள்விபட்டபோது ஏதோ 'டெல்லி அழகி' பற்றிய படமோ என்று நினைத்தேன். பிறகுதான் அது Belle அல்ல, "ட்ராவலர்ஸ் டயேரியா" என்று சொல்வார்களே அந்த மாதிரி டெல்லி வட்டாரத்தில் அதிகம் தொற்றப்படும் ஒருவகை வயிற்றுப் போக்கு நோயான Delhi Belly என்று தெளிந்தேன். படத்தின் உப தலைப்பாக 'Sh!t Happens' என்று வேறு மெனக்கெட்டு போட்டிருக்கிறார்கள் :).

ஆமீர்கான் தயாரிப்பில் அவரது மருமகன் (Nephew) இம்ரான் கான் நடித்தப் படம். படம் பற்றி அவ்வப்போது கேள்விப் பட்டிருந்தாலும் அசிரத்தையாகத்தான் பார்க்கத் தொடங்கினேன். சில நிமிடங்களிலேயே இது ஒருவகை Heist genre என்று தெரிந்துவிட்டது. கய் ரிச்சியின் Love, Stock and Two Smoking Barrels போன்ற படங்கள் உங்களுக்குப் பிடிக்குமா? அப்படி என்றால், இந்தப் படமும் பிடிக்கும். சுவாரசியத்திற்கு உத்தரவாதம்.

படம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தாலும் நேட்டிவிட்டி பாதிக்காத வகையில் இந்திய கதைக் களனில்தான் எடுத்திருந்தார்கள். ஒரு பத்திரிகைக்காரன் (தாஷி), புகைப்படக் கலைஞன் (நிதின்), கேலி சித்திரக்காரன் (அரூப்) மூவரும் அறைத்தோழர்களாக தங்கியிருக்க அவர்களுக்கு இடையே கடத்தல் வைரங்கள் வருகிறது. சாலையோரக் கடையில் கோழிக்கறி வாங்கி சாப்பிடும் நிதினுக்கு டெல்லி பெல்லி என்று வயிற்றுப்போக்கு தொற்றிவிடுவதால் அந்த வைரக் கடத்தலின் கண்ணி அறுபட்டு களேபரமாகி விடுகிறது. வைரங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் கடத்தல்காரன் தாஷியைத் தேடி அடியாள் கூட்டத்தோடு வந்து சேர்கிறான். அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பிக்கும் நண்பர்கள் அந்த கடத்தல் வைரங்களை என்ன செய்கிறார்கள்? கடத்தல்காரனிடமிருந்து தப்பித்தார்களா? இதுதான் கதை.

வழமையான கடத்தல், வைரம், கொள்ளை, ப்ளாக்மெயில் என்று போய் கடைசிக் காட்சியில் காதலர்கள் ஒன்று சேர்வதோடு முடிந்தாலும் செம ஃப்ரெஷ்ஷான திரைக்கதையால் சிக்ஸர் அடிக்கிறார் இயக்குநர் அபிநவ் தியோ.

தாஷி என்னும் பத்திரிகை நிருபராக இம்ரான்கான் கச்சிதமாக செய்திருக்கிறார். தாஷியின் அறைத்தோழர்களாக ஃபோட்டோகிராஃபர் நிதின் பேரி (குணால் ராய் கபூர்) மற்றும் கார்ட்டூனிஸ்ட் அருப் (வீர் தாஸ்) வருகிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் ராஜ் (Vijay Raaz) கடத்தல்காரராக வருகிறார். ஒவ்வொரு சீனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, நுணுக்கமாக எடுக்கப்பட்ட வெகுசில படங்களில் இதுவும் ஒன்று. ஓரிரு வசனங்கள், முகக் குறிப்புகள் மூலமாகவே பாத்திரங்களின் தன்மையை ஸ்கெட்ச் போட்டுக் விடுகிறார்கள். எந்த பாத்திரமும் Shallowவாக இல்லாதது ஆசுவாசமாக இருக்கிறது. பொதுவாக ஸ்லாப்ஸ்டிக் காமெடி என்றால் ரொம்ப அச்சுபிச்சுத்தனமாக இருக்கும். இந்தப் படம் கொஞ்சம் தப்பிப் பிழைத்துவிட்டது.

தாஷி, மேனகா வாசிஷ்ட்டை (பூர்ணா ஜகன்னாதன்) சந்திக்கும்போதே அவர்களிடையே மலரப் போகும் உறவை ஊகித்து விடலாம். ஆனால் அதை நம்பும்படியாக நிகழ்த்தி காட்டிய திரைக்கதையை பாராட்ட வேண்டும். உதாரணத்திற்கு சோனியாவோடு தாஷி காதல் செய்யும் நேரத்தில் மேனகாவிடமிருந்து ஃபோன் வருகிறது. ஈடுபாடே இல்லாமல் முண்டிக் கொண்டிருக்கும் தாஷி சட்டென ஃபோன் அழைப்பை எடுத்துப் பேசுகிறான். பின்னொரு காட்சியில் துப்பாக்கியோடு, வெறி கொண்டு துரத்தும் முன்னாள் கணவனிடமிருந்து தப்பிக்க ஓட்டல் ரூமிற்குள் தஞ்சம் புகும் மேனகா, தாஷியோடு காதல் செய்வது போல் நடிக்கிறாள். அந்த சில நொடி நடிப்பிலேயே அவனுக்கு அவள் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ரொம்பவுமே போல்ட் (bold) ஆன காட்சிகள்தான் என்றாலும் வெகு பொருத்தமான காட்சியமைப்பு.

அதே போல் அரூப் தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக உருவகித்துக் கொண்டு (டிஸ்கோ ஃபைட்டராம்) தன் 'முன்னாள்' காதலியின் திருமணத்திற்கு சென்று செய்யும் 'கற்பனை' கலாட்டாவும் இந்த ட்ரெண்டில் செம காமெடி. தொடர்ந்து வைரக் கொள்ளை, தப்பித்தல், துப்பாக்கி சண்டை என்று ஓடும் போது தாஷி மேனகா மேல் முழு காதலாகி விடுகிறான். இவையெல்லாம் அவன் வருங்கால மாமனார் (சோனியாவின் தந்தை) பரிசாக அளித்த காரில் நடக்கிறது என்பதுதான் உச்சக்கட்ட அங்கதம்.



அரூப்பிற்கு பிடித்த சூப்பர் ஹீரோ 'டிஸ்கோ ஃபைட்டராக' தயாரிப்பாளர் ஆமீர்கான் இறுதி கிரெடிட்ஸ்களில் வருகிறார். தாரே ஜமீன் பர், தோபி காட் வரிசையில் இம்மாதிரி மாற்று ரசனைப் படங்களையும் நம்பி தயாரிக்கும் ஆமிருக்கு ஒரு சல்யூட்.

ஒரிஜினல் காமெடி.

The Little Big Soldier



கிட்டத்தட்ட 20 வருடங்களாக எழுதிக் கொண்டே இருந்தார்களாம் இந்தக் கதையை. இறுதியில் ஜாக்கிசானே சொந்தமாக தயாரிக்க, 2010ல் படமாக வெளியிட்டு இருக்கிறார்கள். ஜாக்கி சான் படம் என்றால் துள்ளல் சண்டையும், அங்கதமுமாக ஜாலியாகப் போகும் என்றுதான் இந்தப் படத்தை தேர்ந்தெடுத்தேன். ஆனால் அருமையான வரலாற்று போர்க் கதையை தன் பாணியில் கொடுத்திருக்கிறார்.

கி.மு. 5ம் நூற்றாண்டிலிருந்தும் 2ம் நூற்றாண்டு வரை சீனாவில் நடைபெற்ற 'அண்டை மாநிலச் சண்டைகளின்' பின்புலத்தில் நடக்கும் கதை. லயாங்க் (Liang) குடிகளும், வேய் (Wei) குடிகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். லயாங்க் இனத்தில் ஒரு சாதாரண வீரனும், வேய் இனத்தின் தளபதியும் மட்டும் போரின் முடிவில் எஞ்சியிருக்கிறார்கள். அந்த சிப்பாய், பெரிய வீரனெல்லாம் இல்லை. ஒரு சின்ன அம்பை தன் வயிற்றில் பாய்ந்திருப்பது போல பிடித்துக் கொண்டு செத்தவன் போல நடித்தே போர்க்களத்தில் உயிர் தப்பிவிடுவான். செத்தவனைக் கொல்ல மாட்டார்களே. பிறகு சமயம் வாய்க்கும்போது தப்பித்து விடுவான்.



படத்தின் தொடக்கத்தில் காயமுற்ற வேய் இனத் தளபதியை பார்க்கும் லயாங்க் சிப்பாய் அவனை சிறைபிடிக்கிறான். அந்த தளபதியை தன் அரசிடம் ஒப்படைத்தால் தனக்கு நாலு செண்ட் நிலம் வெகுமதி கிடைக்கும் என்று கனவு காண்கிறான். அருமையான சீன நாட்டுபுறப் பாடல் ஒன்றைப் பாடியவாறே அந்த தளபதியை லயாங்க் ஊருக்குத் தூக்கி செல்கிறான். சுத்த வீரனான தளபதிக்கும் இந்த சிப்பாய்க்கும் ஆவதே இல்லை. அவர்கள் ஊரை அடைந்தார்களா? வழியில் என்னென்ன இடர்கள் ஏற்பட்டன? எப்படி அந்த இடர்களை தாண்டிச் செல்கிறார்கள்? எதிரெதிர் குணாதிசங்களோடு ஒருவரை ஒருவர் எப்படிப் பொறுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் கதை.

வழியில் ஒரு பாழடைந்த வீட்டில் தங்க நேர்கிறது. அங்கிருக்கும் சிறு பெண் இவர்கள் இருவரையும் வரவேற்பது போல் நடித்து மயக்கமடைய செய்து குதிரையை திருடிக் கொண்டு ஓடி விடுகிறாள். பிறகு கால்நடையாகவும், மீண்டும் குதிரையை சம்பாதித்துக் கொண்டும், படகிலும் பயணித்து தன் இடத்தை அடையும்போது எதிரிநாட்டின் தளபதியும், சிப்பாயும் ஏறக்குறைய முழு மனமாற்றம் அடைந்து விடுகிறார்கள். சிப்பாய்களின் கனவுகள் எப்படி தேசங்களின் மாறுதலில் சிக்குண்டு அழிகின்றன என்பதை சொல்லி முடிக்கிறது படம்.

ஜாக்கி சான் பெரும்பாலும் ஹாங்காங் அடிதடிப் படங்களில் நடித்திருந்தாலும், Gorgious, Shinjuku Incident போன்ற மாறுபட்ட களன்களிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். The Little Big Soldier சீன வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தை அருமையான முறையில் பதிவு செய்திருக்கிறது. ஜாக்கிசானின் தொப்பியில் மற்றொரு சிறகு.



இவர்களைப் போலத்தான் வைனும். வயதாக வயதாக ருசி கூடிக் கொண்டே போகும்.

4 மறுமொழிகள்:

ILA(@)இளா said...

நம்மளால நம் காலத்து நாயகர்களை விட்டுக்குடுக்க முடியாது, இன்னும் எம்ஜியார்ய்ம், TMSம் கோலேச்சிக்கொண்டிருப்பதாக நினைக்கும் சிலர் மாதிரி

வானம்பாடிகள் said...

நமக்கு ஹிந்தி மாலும் நை அப்படிங்கறதால ஜெய் ஜாக்கி:)). தேடுவோம் ஆன்லைன்ல. நன்றி ஸ்ரீதர்

ஸ்ரீதர் நாராயணன் said...

@இளா // நம் காலத்து நாயகர்களை விட்டுக்குடுக்க முடியாது //

ஆமாங்க. இம்ரான்கான், ரன்வீர் கபூர், விமல், ஜெய் இவங்கள்லாம் விட்டுக் கொடுக்கவே கூடாது. :))

@பாலா சார் - டெல்லி பெல்லி - ஆங்கிலப் படம்தான். தைரியமாப் பாருங்க. :)

Prabhu Rajadurai said...

"நட்பின் நலம் கருதி நாக்கை உள்ளடக்கி நாக்குவர்மம் பழகியதுதான் மிச்சம்"

:-)

எனிவே, லேட்டாக தீபாவளி வாழ்த்துகள்!