November 15, 2011

சுரையா



'The Stoning of Soraya' படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. இனி பார்ப்பதாக இருந்தால் இந்த கட்டுரையை தவிர்த்துவிடவும். வெகு காலம் முன்பு பார்த்த படம். எங்கோ அடி ஆழத்திலிருந்து முகிழ்த்துக் கொண்டு வரும் நினைவுகள் இன்று வார்த்தை வடிவில் வந்து விழுகின்றன. முக்காலும் நினைவிலிருந்து எழுதுகிறேன். மீதி கால் விக்கிபீடியா உதவியுடன்.

'சுரையாவை கல்லால் அடித்தல்' போன்ற படங்கள் ஒருவகை டாக்குமெண்ட்ரித்தனம் கொண்டது. ஆனால் இது டாக்குமெண்ட்ரி அல்ல. கொஞ்சம் தரவுகள், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் மிகைபடுத்துதல் எல்லாம் கலந்துதான் இப்படிப்பட்ட படங்கள் உருவாகின்றன. இதன் அழகியல் சற்றே மாறுபட்டது. இராணிய கிராமத்தை, அதன் மக்களை, அவர்களின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினாலும், அதன் உள்ளுறையாக பெண்ணடிமைத்தனத்தை வெளிப்படையாக அதன் குரூரத்துடன் முன் வைக்கிறது.

'குஹ்ப்பாயே' (Kuhpayeh) என்பது இராணில், சுமார் ஐயாயிரம் பேர்கள் குடியிருக்கும் சின்னதொரு கிராமம். வழியோடு போகும் பத்திரிகையாளர் ஒருவரின் கார் மக்கர் பண்ண அந்த ஊரிலிருக்கும் மெக்கானிக்கிடம் உதவி வேண்டுகிறார். கார் ரிப்பேர் ஆகும் கால இடவெளியில் அந்த பத்திரிகையாளரை 'சாரா' (Zahra) என்னும் பெண்மணி சந்திக்கிறார். அவரது உத்தியோகம் பற்றி தெரிந்ததும், சில காலம் முன் தங்கள் ஊரில் நிகழ்ந்த ஒரு கொடுங்கொலையைப் பற்றி சொல்கிறார். பத்திரிகையாளரும் சாரா சொன்ன கதையை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்கிறார். அதுதான் 'சுரையாவை கல்லால் அடித்தல்'.




சாராவின் மருமகளான சுரையா ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக, கணவன், நான்கு குழந்தைகள் என்று பெரும்பாலான தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட இளம் தாய். கணவனின் ஆதிக்க போக்கும், ஆண் பிள்ளைகள் மேல் பிரத்யேக பாசம் காட்டுவதும், அவளைச் சீண்டினாலும் அதை தன் வாழ்க்கையின் பகுதியாக எண்ணி ஏற்றுக் கொள்கிறாள்.

சுரையாவின் கணவனான அலிக்கு ஒரு அதிர்ஷ்டம் அடிக்கிறது. பதினாலு வயதேயான ஒரு இளம் பெண்ணை மணக்கும் வாய்ப்பு. அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால், சுரையாவின் விவாகரத்து இருந்தால்தான் அலியால் அந்த அதிர்ஷ்டத்தை அடைய முடியும். அதுவும் தனது பையன்களை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்புகிறான். போயும் போயும் பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய?

சுரையாவிற்கு இது வாழ்க்கை பிரச்னையாகிறது. விவாகரத்து செய்துவிட்டு அந்த கிராமத்தில் என்ன பிழைப்பது? அதுவும் பெண் பிள்ளைகளை மட்டும் வைத்துக் கொண்டு? பாசம், சுதந்திரம், விசுவாசம் எல்லாம் தாண்டி அவளுக்கு அவளுடைய வாழ்க்கையின் பாதுகாப்பு பெரிய பிரச்னையாகிறது. அவள் நினைத்தபடியே ஊர் தலைவரான முல்லாவும் அலியின் சார்பாக அவளிடம் பேரம் பேசுகிறார். விவாகரத்திற்கு ஒத்துக் கொண்டால் நல்ல எதிர்காலமும் தன்னுடைய 'பிரத்யேக' பாதுகாப்பும் உத்தரவாதம் என்று சுரையாவிற்கு வலை விரிக்கிறார்.

சுரையா ஒரே முடிவாக இருக்கிறாள். வேண்டாத கணவனே என்றாலும், எக்காரணம் கொண்டு 'குடும்பம்' அளிக்கும் பாதுகாப்பை அவள் விட்டுத்தர முடியாது என்கிறாள். மனைவியை இழந்த வயதான மெக்கானிக்கின் மகனை பராமரித்தும், அவருக்கான சமையல் செய்து கொடுத்தும், சிற்சில சேவைகளின் மூலம் சிறிது பணம் ஈட்டி தன் காலில் நிற்க முயற்சிக்கிறாள். தனக்கு விடுதலையும் தராது, தன்னை முழுவதும் சார்ந்திருக்காமல் அடம் பிடிக்கும் மனைவியை பழிவாங்க அலிக்கு நல்ல வாய்ப்பு வாய்க்கிறது.

ஒருமுறை வேலை செய்த களைப்பில் மெக்கானிக்கின் வீட்டில் கட்டிலில் சற்றே கண்ணயர்கிறாள் சுரையா. பின்னர் அதையே அவர்களுக்கிடையான உரையாடலில் குறிப்பிடுகிறாள். அந்த உரையாடலை கேட்க நேரிடும் அலி, அதை அப்படியே திரித்து தனது மனைவியின் நடத்தை மேல் சந்தேகம் இருப்பதாக முல்லாவிடம் புகார் செய்கிறான்.

இராணிய சட்டப்படி ஒரு பெண்ணின் நடத்தை மேல் சந்தேகம் என்பது மிகப் பெரும் குற்றசாட்டு. முதலில் உடன்பட மறுக்கும் முல்லா, அலியின் குற்றசாட்டிற்கு சாட்சி தேவை என்கிறார். கணவனை இழந்த சாராவை 'பாதுகாப்பாக' வைத்திருக்கும் ஊர்த் தலைவருக்கு அலியின் போக்கு பிடிக்கவில்லை. சாரா அவரிடம் சுரையாவிற்காக மன்றாடுகிறாள். ஆனால் முல்லா மற்றும் அலியின் திட்டப்படி யாரும் சுரையாவிற்கு எதிராக சாட்சி சொல்லிவிட்டால் அவரால் ஒன்றும் செய்ய முடியஅது. மனைவி இல்லாமல் தனியாக குழந்தையை வளர்க்கும் மெக்கானிக்கிடம் பேரம் பேசுகிறார்கள். 'என் கட்டிலில் சுரையா உறங்கினாள்' என்று அவர் பொதுவில் ஒத்துக் கொண்டால், சுரையாவின் மேல் நடத்தை தவறியவள் குற்றத்தை ருசுபடுத்திவிடலாம்.

அலி மற்றும் முல்லாவின் ஏற்பாட்டின்படி எலலம் நடக்க சுரையாவின் தகப்பனாருக்கும் செய்தி சொல்லி விடப்படுகிறது. எல்லாருக்கும் முன்பாக சுரையாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவளுக்கு 'அந்த' தண்டனையும் வழஙகப் படுகின்றது. கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று.




இதற்கப்புறம் ஒரு இருபது நிமிடத்திற்கு சுரையாவை 'அந்த' தண்டனைக்கு எப்படி தயார்படுத்துகிறார்கள், மற்றும் எப்படி அந்த தண்டனையை நிறவேற்றுகிறார்கள் என்று விலாவாரியாக காட்சிபடுத்துகிறார்கள்.

அரசாஙக் பாதுகாவலர்களாக இருவர் வந்து சேர ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி சுரையாவை கட்டி இழுத்துக் கொண்டு ஊர் நடுவே தண்டனை நிறவேற்றப்படும் இடத்திற்கு கொண்டு வருகிறார்கள். இடுப்பு ஆழத்திற்கு குழி வெட்டப்படு அதில் அவள் இறக்கி விடப்பட்டு குழி மூடப்படுகிறது. சுற்றிலும் அரை வட்டத்திற்கு மக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் எல்லாரும் ஒன்று கூடி நிற்கிறார்கள்.

அப்பொழுது ஊர் ஊராக சென்று வித்தைக் காட்டி பிழைக்கும் குழு ஒன்றும் அந்த ஊரிற்கு வருகிறது. வித்தைக் காட்டுபவர் உரக்க விளமபரத்தை கூவியவாறே வருகிறவர் இந்த தண்டனை நிறைவேற்றும் காட்சியைக் கண்டு அமைதியாகிவிடுகிறார். அந்த வித்தையை விட இந்த வித்தை இன்னும் சுவாரசியம் என்று நினைத்தாரோ என்னவோ...



முதல் அடியாக சுரையாவின் தகப்பனார் ஒரு கல்லெடுத்து வீசுகிறார். அது சுரையா மேல் படாமல் குறி தப்பிவிடுகிறது. உடனே சாரா முல்லாவிடமும், ஊர்த் தலைவரிடமும் முறையிடுகிறாள். குறி தப்பியது தெய்வ சமிக்ஞையாகவே பார்க்க வேண்டும். சுரையாவை தண்டிப்பதை கடவுள் விரும்பவில்லை என்று சொல்கிறாள். ஆனால் அடுத்த வாய்ப்பில் அப்பா சரியாக சுரையாவின் மேல் கல்லெறிந்து விடுகிறார். தொடர்ந்து தனக்கு வசப்படாதவளை முல்லாவும், தன்னை புறக்கணித்து சிறுமைபடுத்தியவளை அலியும் கல்லால் அடிக்கிறார்கள். சுரையாவின் பையன்கள் கையிலும் கற்களைக் கொடுத்து எறியச் செய்கிறார்கள். அப்பாவின் அடுத்த பதிப்பாக இருக்கும் மூத்த மகன் உற்சாகமாக அம்மாவை கல்லால் அடிக்கிறான். பிறகு குழந்தை மனம் உறுத்த மனம் கலங்கி அழுகிறான்.

ஒவ்வொரு கல்லும் நம் மேல் விழுகிறது. கொஞ்ச நேரத்தில் சடசடவென பல கற்கள் நம்மேல் வந்து விழுந்தவண்ணம் இருக்கின்றன. அவள் இறக்கும்வரை. சுரையாவோடு நாமும் சிறுகச் சிறுக வலியால் துடித்தபடிக்கு இறக்கிறோம்.

இப்பொழுது கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. அந்த பத்திரிகையாளரை சாரா சந்தித்துப் பேசுவது தெரியவரும் முல்லாவும் ஊர்க்காரர்களும் மெக்கானிக்கின் கடைக்கு வருகிறார்கள். பத்திரிகையாளர் தப்பித்தாரா? சுரையாவின் கதை எப்படி வெளி உலகிற்கு தெரிய வந்தது? திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் இக்கேள்விகளுக்கு பதில் இருக்கின்றது.



சுரையாவின் நடு நெற்றியில் விழும் முதல் கல் பல காலத்திற்கு என் தலையில் விழுந்த வண்ணம் இருந்தது. இந்தப் படத்தைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. ஆனால் இந்தப் படம் வெளிப்படுத்தும் தாக்கத்தை வார்த்தைகளால் மட்டும் சொல்லிவிட முடியுமா என்ன?

4 மறுமொழிகள்:

natbas said...

//
'The Stoning of Soraya' படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. இனி பார்ப்பதாக இருந்தால் இந்த கட்டுரையை தவிர்த்துவிடவும்//

படம் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவது உசிதம் என்று தோன்றுகிறது.

நன்று.

வானம்பாடிகள் said...

டோரண்ட்ல தேடுறேன். ஆனாலும் படிச்சிட்டேன்:)

ராஜ நடராஜன் said...

//வானம்பாடிகள் said...
டோரண்ட்ல தேடுறேன். ஆனாலும் படிச்சிட்டேன்:)//காணாமல் போனவர்கள் பட்டியலுக்கு காரணம் இப்பத்தானே புரியுது:)

ஸ்ரீதர் நாராயணன் said...

@நட்பாஸ் - நல்ல படம்தான். வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பாருங்க தல.

@பாலா சார் - படம் பாத்திட்டு உங்க ரெவ்யூவையும் போடுங்களேன் :)

@ராஜ நடராஜன் - என்ன சொல்றீங்கன்னு புரியல.